தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது பீகார் தேர்தலை தொடர்ந்து பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி என்ற நிலை உருவாகியுள்ளது. பீகார் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் பாதியளவு கூட வெற்றியை பதிவு செய்யவில்லை. இதனால் தமிழக தேர்தலை மட்டுமே காங்கிரஸ் நம்பி இருக்கிறது.
தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் பீகார் தேர்தலுக்கு முன்பு வரை திமுக தலைமையிடம் அதிக தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு என பல கோரிக்கைகளை முன்வைத்து வந்தது. ஆனால் பீகார் தேர்தல் முடிவுக்கு பிறகு தொகுதி பங்கீடு தொடர்பாக வாய் திறக்கவில்லை. இதனால் காங்கிரஸ் பீகார் தேர்தல் முடிவின் மூலம் அதிருப்தியில் உள்ளதாக பலரும் கூறினர்.
ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்காது, திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கூறி வந்தனர். இப்படியான நிலையில் திமுக விடும் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக காங்கிரஸ் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழு திமுகவிடம் ஆட்சி பங்கை கேட்டு வலியுறுத்தி வருவதாகவும் அதற்கு ஸ்டாலின் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் தரப்பில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த குழு சென்னை அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது. அப்போது எங்களுக்கு 70 தொகுதிகள் வேண்டும், ஆட்சியில் பங்கு கொடுங்கள் என அவர்கள் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் இதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லையாம். திமுக தரப்பில் இன்னும் குழு அமைக்கப்படவில்லை. அமைத்ததும் இது குறித்து பேசுவோம் என்று சொல்லி ஸ்டாலின் அனுப்பி விட்டாராம். அதேசமயம் 70 தொகுதிகளை திமுக கொடுக்க வாய்ப்பு இல்லை. அதிலும் எதிர்க்கட்சியாக கூட திமுக அமருமே தவிர ஆட்சியில் பங்கு என்பதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. திமுக சரித்திரத்தில் அது கிடையாது என திமுக தரப்பினர் கூறி வருகின்றனர்.
