“அண்டப்புளுகை விஞ்சிய ஆதவ் அர்ஜுனா புளுகு”…. முதலமைச்சருக்கு தெரியாமல் ரூ.1200 கோடி திட்டமா?…. தவெக-வை துவைத்து தொங்கப்போட்ட திமுக….!

By Nanthini on புரட்டாதி 20, 2026

Spread the love

YouTube

சென்னை பட்டினப்பாக்கத்தில் 25.55 ஏக்கர் நிலப்பரப்பில், ஃபோர்ஷோர் எஸ்டேட்டில் சுமார் 1,200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான ‘கொள்கை அளவிலான ஒப்புதல்’ அரசாணை ஏற்கனவே வெளியாகியுள்ளது. ஆனால், புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து முதலமைச்சர் இன்னும் முடிவெடுக்கவில்லை என தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதற்கு மிகக் காரசாரமாக பதிலளித்துள்ள திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன், “மாற்றம் எனச் சொன்னவர்கள் அண்டப் புளுகு என்பதை, ஆதவ் அர்ஜுனா புளுகு என மாற்றிவிட்டார்களா?” என்று கேள்வி எழுப்பி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

   

இதுகுறித்து இ.பரந்தாமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாயைத் திறந்தாலே பொய் பேசுவதற்கு உதாரணமாக வாழும் நிர்வாகியின் லேட்டஸ்ட் பொய்தான் இது” என விமர்சித்துள்ளார். இடத்தை ஆராய்ந்து முடிவு செய்ய ஒரு குழு அமைப்பதற்கான அரசாணை மட்டுமே வெளியிடப்பட்டிருந்தால், ‘முதல்வர் இன்னும் முடிவெடுக்கவில்லை’ எனக் கூறுவதில் நியாயம் உண்டு. ஆனால், வருவாய்த்துறை மற்றும் வீட்டுவசதி வாரியத்திற்குச் சொந்தமான அரசு நிலங்கள் எவ்வளவு எனத் துல்லியமாகக் கணக்கிட்டு, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று அரசாணையே வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதல்வர் முடிவெடுக்கவில்லை என மறுப்பது மக்களை ஏளனமாக நினைக்கும் செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

   

இத்தகைய அரசாணை முதலமைச்சருக்குத் தெரியாமல் எப்படி வெளியாகியிருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ள பரந்தாமன், “முதலமைச்சரை டம்மியாக வைத்துக்கொண்டு அரசாங்கத்தின் பணிகளைச் செய்யும் அந்த மறைமுக ‘Super CM’ யார்?” என சாடியுள்ளார். மேலும், அனைத்துத் தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி, மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடும் வகையில் இந்தத் திட்டம் கொண்டுவரப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள அவர், பொய் சொல்லி மக்களை மடைமாற்றும் போக்கை தவெக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் வலியுறுத்தியுள்ளார். மீனவர் நலனுக்குப் பாதிப்பு ஏற்படும் எனில் திமுக எந்த எல்லைக்கும் சென்று போராடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.