சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சோமு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். தற்போதைய ஆளுங்கட்சிக்கு நிர்வாகம் குறித்த எந்த அடிப்படை புரிதலும் இல்லை என்றும், அவர்கள் வெறும் அதிர்ஷ்டத்தாலும் சமூக வலைதளங்களின் பலத்தாலும் மட்டுமே அதிகாரத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், இப்புதிய அரசை ‘மாட்டுத் தொழுவத்தில் உள்ள நாய்’ என உவமைப்படுத்திய அவர், மக்கள் நலனுக்காக நீண்டகாலம் உழைத்த திராவிடக் கட்சிகளிடம் இருந்து இவர்கள் நிர்வாகத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பெயரளவிலான கூட்டங்களில் திமுக பங்கேற்காது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை குறித்த குற்றச்சாட்டு தமிழ்நாட்டிற்கான நாடாளுமன்றத் தொகுதிகளை அதிகரிப்பது தொடர்பான தொகுதி மறுவரையறை விவகாரத்திலும் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை அவர் சாடினார். மாநிலத்தின் உரிமைகளை நிலைநாட்ட மத்திய அரசிடம் முதலமைச்சர் விஜய் உரிய முறையில் அழுத்தம் கொடுக்கவில்லை என அவர் தெரிவித்தார். முதலமைச்சர் நேரடியாகப் பேசாமல் அமைச்சர்களைக் கொண்டு முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவிப்பது, தமிழ்நாட்டு மக்களின் எதிர்காலத்துடன் விளையாடும் பொறுப்பற்ற செயலாகும் என அவர் தனது அதிருப்தியைப் பதிவு செய்தார்.
பாஜக கூட்டணி மற்றும் திமுகவின் நிலைப்பாடு எதிர்காலத்தில் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்குமா மற்றும் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவு அளிக்கப்படுமா என்ற கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். அரசியலில் யாரும் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பரும் இல்லை எனத் தெரிவித்த அவர், தமிழ்நாட்டிற்கு அதிகபட்ச தொகுதிகளைப் பெற்றுத் தரும் எந்தவொரு நல்ல திட்டத்தையும் திமுக ஆதரிக்கும் என உறுதியளித்தார். கூடுதல் இடங்கள் என்ற ஆசை வார்த்தைகளில் தமிழ்நாடு சிக்கக்கூடாது என தவெக அரசு சமீபத்தில் கூறியிருந்த நிலையில், கனிமொழி சோமுவின் இந்தப் பேச்சு, நாடாளுமன்றத்தில் மசோதாவிற்கு திமுக ஆதரவளிக்குமா என்ற புதிய அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
