“விஜய் எலும்பை உடைப்பேன்”…. 11 மணி நேர விசாரணை, ஆகஸ்ட் 3 வரை ஜெயில்…. திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் வழக்கின் அடுத்த மூவ்….!

By Nanthini on ஆடி 23, 2026

Spread the love

தமிழகத்தில் அரசியல் சூழல் பரபரப்படைந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், ஜாமீன் கோரி தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சட்டமன்றத்தைக் கூட்டட்டும், விஜய்யின் எலும்பை உடைப்போம் எனக் கடுமையான மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இப் பேச்சுக்கு அரசியல் வட்டாரத்தில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, கடந்த திங்கள்கிழமை காலை காவல்துறை அவரை அதிரடியாகக் கைது செய்தது.

கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயன் தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சுமார் 11 மணி நேரம் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இதனிடையே, முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உள்ளிட்ட திமுகவினர் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, இரவில் தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சுமதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் அவர் உடனடியாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

   

இதனைத் தொடர்ந்து, மார்க்கண்டேயன் தரப்பில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேவேளையில், அவரைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறையினரும் மனு தாக்கல் செய்தனர். நேற்று இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சுமதி, மார்க்கண்டேயனிடம் ஏற்கனவே போதுமான விசாரணை நடத்தப்பட்டு விட்டதால் போலீஸ் காவல் தேவையில்லை என்றும், அதேசமயம் முதல்வர் குறித்தே கடுமையான மிரட்டல் விடுத்துப் பேசியிருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்றும் கூறி இரு தரப்பு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

   

நீதிமன்ற வளாகத்தில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய மார்க்கண்டேயன், சிறையில் 25-க்கும் மேற்பட்ட புத்தகங்களைப் படித்து வருவதாகவும், தாம் எத்தனை நாட்கள் சிறையில் இருக்கிறேனோ அவ்வளவு வேகமாக மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்தார். தூத்துக்குடி கீழ்நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.