பேராவூரணி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தல் செலவுகளுக்காக வாங்கிய கடன் சுமை அவரது கழுத்தை நெறிப்பதாகவும், இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அவர் இதுகுறித்து திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினிடம் இருமுறை நேரில் பேசி முறையிட்டதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், கட்சித் தலைமையிடமிருந்து இதுவரை எந்தவிதமான சாதகமான பதிலும் வராத நிலையில், அவர் தவெகவின் கொறடா சபரிவாசனை ரகசியமாகச் சந்தித்துப் பேசியிருப்பது இந்த ஊகங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. எனினும், தற்போதைய சூழலில் அவர் அவசரப்பட்டு கட்சி மாறமாட்டார் என்றும், இவை யாவும் வெறும் வதந்திகளே என்றும் அசோக்குமாரின் ஆதரவாளர்கள் திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.
