தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக நன்றி அறிவிப்புக் கூட்டத்தில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தமிழக முதல்வர் விஜய் குறித்துப் பேசிய சர்ச்சை வார்த்தைகள் தமிழக அரசியலில் தற்பொழுது பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. மேடையில் பேசிய அவர், முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசி, மிகவும் கடுமையான மற்றும் மிரட்டல் தொனியிலான கருத்துக்களைப் பதிவு செய்தார். ஒரு மாநிலத்தின் முதல்வரைக் பகிரங்கமாகத் தாக்கிப் பேசிய இந்த விவகாரம் பொதுமக்களிடையேயும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது உரையில் முதல்வர் விஜய்யின் அண்மைக்கால அரசியல் விமர்சனங்களைச் சுட்டிக்காட்டிய மார்க்கண்டேயன், இந்திய வரலாற்றிலேயே இவ்வளவு கேவலமான ஒரு முதல்வரை யாரும் பார்த்ததில்லை என்று சாடினார். காமராஜர், அண்ணா, ஜெயலலிதா போன்ற தலைவர்கள் தேர்தலில் தோற்றபோது அன்றைய அரசியல் தலைவர்கள் காட்டிய நாகரிகம் தற்போதைய முதல்வரிடம் இல்லை எனக் குற்றம் சாட்டிய அவர், “சட்டசபையில் உங்கப்பாவைத் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்று விஜய் பேசியது போன்ற தரமற்ற பேச்சைத் தான் எங்கும் கேட்டதில்லை என்றும், திமுகவினரை அவர் கோமாளிகள் என்று நினைக்கிறாரா என்றும் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த மோதல் போக்கின் உச்சக்கட்டமாக, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது விஜய்யின் எலும்பை உடைத்துவிட்டுத்தான் வீட்டுக்கு அனுப்புவோம் என மார்க்கண்டேயன் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். தைரியமிருந்தால் சட்டசபையைக் கூட்டிப் பார்க்கட்டும் சவால் விட்ட அவர், முந்தைய அரசியல் நெருக்கடிகளின் போது கரூரிலிருந்து இரவோடு இரவாக சென்னைக்கு ஓடியது யார் என்றும் கேள்வி எழுப்பினார். கொளத்தூர் தொகுதியில் கொத்து பரோட்டா போட்ட விவகாரம், விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தும், தமிழகத்தில் தற்பொழுது மூன்று வயது குழந்தை முதல் 95 வயது பாட்டி வரை யாரும் பாதுகாப்பாக நடமாட முடியவில்லை என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இறுதியாக, தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகளையும், சினிமா டிக்கெட் விலையையும் ஒப்பிட்டுப் பேசிய அவர், 100 ரூபாய் சினிமா டிக்கெட்டை 1000 ரூபாய்க்கு விற்றவரான முதல்வர் விஜய்யே ஊழலின் மொத்த உருவம் என்று சாடினார். திமுக தலைவர்களைத் தொடர்ந்து அவமதித்தால் எந்த இடத்தில் இருந்தாலும் அடித்து விரட்டுவதற்குத் தங்களின் தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று எச்சரித்த மார்க்கண்டேயனின் இந்தப் பேச்சு, தமிழகத்தில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே ஏற்கனவே நிலவி வரும் அரசியல் அனலை மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
