“ஸ்டாலினுக்கு தெரியாமல் நடந்த டீலிங்?”…. அதிமுக மாஜியிடம் மண்டியிட்ட திமுக அமைச்சர்கள்…. அறிவாலயத்தை அதிரவைத்த சீக்ரெட்….!

By Nanthini on மாசி 4, 2026

Spread the love

புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக சார்பில் ரகுபதி, மெய்யநாதன் என இரண்டு அமைச்சர்கள் இருந்தும், அந்த மாவட்டத்தில் இன்னும் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் செல்வாக்கே மேலோங்கி இருப்பதாக எழுந்துள்ள புகார் அறிவாலய வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சி அமைச்சர்கள் அதிகாரத்தில் இருந்தும், மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரின் பிடி குறையாமல் இருப்பது மாவட்ட திமுக நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, திமுக தலைமையகம் வரை இந்த விவகாரம் புகாராகச் சென்றுள்ளது.

மாவட்டத்தில் கலைஞர் கருணாநிதிக்குச் சிலை வைப்பதில் அமைச்சர்கள் காட்டி வரும் மெத்தனப் போக்கு தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவுக்குச் சிலைகள் வைக்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தும் பொது இடங்களில் கருணாநிதிக்குச் சிலை வைக்க அமைச்சர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட திமுக நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் வெளிப்படையாகவே தங்கள் குமுறல்களைப் பதிவிட்டு வருவது சர்ச்சையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

   

முக்கியமாக, கனிம வளத்துறை அமைச்சராக இருக்கும் ரகுபதிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் இடையே ரகசிய உடன்பாடு இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விஜயபாஸ்கருக்குச் சொந்தமான குவாரிகளில் முறைகேடுகள் நடப்பதாக அமலாக்கத்துறை சோதனை நடத்தும் வேளையில், மாநில கனிமவளத்துறை அந்தப் பக்கம் எட்டிப் பார்க்காமல் இருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ரகுபதியும் விஜயபாஸ்கரும் ஒருவரை ஒருவர் விமர்சிக்காமல் ‘அட்ஜெஸ்ட்மெண்ட்’ அரசியல் செய்வதாக அறிவாலயத்திற்குப் புகார்கள் பறக்கின்றன.

   

தங்கள் மாவட்டத்தில் ஆளுங்கட்சியாக இருந்தும் எதிர்க்கட்சித் தலைவரின் கையே ஓங்கி இருப்பதை திமுக உடன்பிறப்புகளால் ஜீரணிக்க முடியவில்லை. அமைச்சர்களின் இந்த மென்மையான அணுகுமுறை கட்சியின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது சீரியஸாகியுள்ள நிலையில், கட்சித் தலைமை சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் விளக்கம் கேட்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த மவுனப் போர் வரும் காலங்களில் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கலாம்.