தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக மாநில துணைத்தலைவர் குஷ்பூ, திமுக அரசு மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துப் பேசினார். மத்திய அரசு கொண்டு வரும் எந்தவொரு சட்டத்தையும் திமுகவினர் கண்மூடித்தனமாக எதிர்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், தங்களால் செய்ய முடியாத நற்காரியங்களை மத்திய அரசு செய்வதால் திமுகவிற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளதாகச் சாடினார். குறிப்பாக, தொகுதி மறுவரையறை சட்டத்தை எதிர்ப்பதன் மூலம் திமுக தனது தோல்வி பயத்தை வெளிப்படுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக அரசியல் செய்வதாகக் குறிப்பிட்ட குஷ்பூ, இந்தியா முழுவதும் வேறு எந்த மாநிலத்திலும் இதற்கு இவ்வளவு பெரிய எதிர்ப்பு இல்லாதபோது தமிழகத்தில் மட்டும் ஏன் போராட்டம் நடத்தப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார். திமுகவிற்கு அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது இப்போதே தெரிந்துவிட்டதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் அனைவரும் இந்த ஏமாற்றத்தை உணர்ந்தே செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார். தோல்வி பயம் காரணமாகவே இத்தகைய விவகாரங்களை அவர்கள் கையில் எடுப்பதாக அவர் விமர்சித்தார்.
மேலும், சமீபத்தில் நடந்த போராட்டம் ஒன்றில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிளாஸ்டிக் லைட்டரைப் பயன்படுத்தியதை சுட்டிக்காட்டிய குஷ்பூ, பிளாஸ்டிக் தடை அமலில் இருக்கும் நிலையில் ஒரு மாநிலத்தின் முதல்வரே இப்படிச் செய்வது அவரது அடிப்படை அறிவின்மையைக் காட்டுகிறது என்றார். “பிளாஸ்டிக் தடை பற்றித் தெரியாமல் செயல்படும் நீங்கள் எப்படி மாநிலத்தைக் காப்பாற்றப் போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பிய அவர், முதல் பக்கச் செய்திகளில் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய செயல்களில் திமுகவினர் ஈடுபடுவதாகத் எள்ளி நகையாடினார்.
திமுக தலைவர்களின் பேச்சு நாகரீகம் குறித்தும் அதிருப்தி தெரிவித்த குஷ்பூ, மூத்த தலைவர்கள் தகாத வார்த்தைகளில் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதாகக் கூறினார். மற்றவர்களுக்கு மதிப்பளிக்கத் தெரியாத திமுகவினரைப் போலன்றி, தாங்கள் இப்போதும் திமுகவினரை மரியாதையுடன்தான் விளிப்பதாகத் தெரிவித்தார். இறுதியாக, தொகுதி மறுவரையறை குறித்து கமல்ஹாசன் கூறிய கருத்துகளுக்கு திமுகதான் பதிலளிக்க வேண்டும் என்றும், அவர் இந்தத் தேர்தலில் போட்டியிடாததால் அவரைப் பற்றிப் பேசத் தேவையில்லை என்றும் கூறி தனது பேட்டியை முடித்துக் கொண்டார்.
