தமிழ்நாட்டின் அரசியல் களம் கடந்த அரை நூற்றாண்டுகளாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களைச் சுற்றியே சுழன்று வந்த நிலையில், தற்போதைய அரசியல் சூழல் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையிலானப் போட்டியாகப் பரிணமித்துள்ளதாக விவாதங்கள் எழுந்துள்ளன. அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திமுகவை மேலும் வலுப்படுத்தவும் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தவும் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, கட்சி அமைப்புகளைச் சீரமைக்கும் பணிகளும் ஆலோசனை கூட்டங்களும் தீவிரமடைந்து வருகின்றன.
இந்தச் சூழலில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வடக்கு மண்டல வழக்கறிஞர் அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநிலத்தின் தற்போதைய அரசியல் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலவரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தவெக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் கோவை கல்லூரி மாணவர் கொலைச் சம்பவத்தைக் சுட்டிக்காட்டியும் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும் என்றும், மேகதாது அணை விவகாரம் தொடர்பாகவும் தவெக அரசை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
