துரைமுருகன் பதவி பறிப்பு?…. உதயநிதிக்கு புதிய பதவி… கொந்தளிக்கும் சீனியர்கள்…. திமுகவில் அடுத்தடுத்து காத்திருக்கும் டுவிஸ்ட்…. அலறும் அறிவாலயம்….!

By Nanthini on ஆவணி 17, 2026

Spread the love

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக அமைத்த மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் நோக்கில் உயர்நிலைச் செயல்திட்டக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டங்கள் கூட்டப்படவுள்ள நிலையில், கட்சியின் உள்கட்டமைப்பில் கடும் புகைச்சல் நிலவி வருகிறது. குறிப்பாக, பொதுச்செயலாளர் பதவி, செயல் தலைவர் பொறுப்பு மற்றும் மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்துவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் தலைமைக்கும் மூத்த நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த உள்கட்சிப் பூசல்கள் அறிவாலயத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள துரைமுருகன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டால், அடுத்த பொதுச்செயலாளராக யாரை நியமிப்பது என்பதில் இரு வேறு துருவங்களாகக் கருத்துகள் நிலவுகின்றன. மூத்த தலைவர்கள் சிலர் தங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என வியூகம் வகுத்து வரும் வேளையில், தற்போதைய கள எதார்த்தத்திற்கு ஏற்ப இளைய தலைமுறை அல்லது மாற்று சமூகப் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இதனால் ஒருமித்த முடிவை எட்டுவதில் மு.க.ஸ்டாலினுக்குக் கடுமையான சவால் எழுந்துள்ளது.

   

அதேவேளையில், உதயநிதி ஸ்டாலினை செயல் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு இணைப் பொதுச்செயலாளர் பதவியையும் வழங்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினே சுறுசுறுப்பாக இயங்கி வரும் சூழலில், செயல் தலைவர் பதவி எதற்கு என மூத்த நிர்வாகிகள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், 70 வயதைக் கடந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடையாது என்ற விதியையும், மாவட்டங்களின் எண்ணிக்கையை 78-லிருந்து 100-க்கும் மேலாகப் பிரிக்கும் திட்டத்தையும் தற்போதைய மூத்த மாவட்டச் செயலாளர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

   

மாவட்டச் செயலாளர்கள் மட்டத்தில் மட்டுமல்லாமல், அடிமட்ட அளவில் ஒன்றிய மற்றும் வார்டு செயலாளர்களையும் மாற்ற பரிந்துரைக்கப்பட்ட போதிலும், அவர்களை நீக்கினால் அதிருப்தியடைந்து எதிர்க்கட்சிகளுக்குத் தாவிவிடுவார்களோ என்ற அச்சமும் தலைமையைத் தொற்றிக்கொண்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி மற்றும் உட்கட்சிப் பூசல்களுக்கு இடையே, நிர்வாகிகளின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி திமுக தலைமை எவ்வாறு அமைப்பை மறுசீரமைக்கப் போகிறது என்பது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.