திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் அணி கூட்டத்திற்குப் பொதுச்செயலாளர் துரைமுருகன் தாமதமாக வந்ததாகவும், இதனால் அவர் விரக்தியில் அங்கிருந்து கிளம்பிச் சென்றதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்தத் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று திமுக தகவல் தொழில்நுட்ப அணி அதிகாரப்பூர்வமாக மறுப்புத் தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி கட்சிப் பணிகள் தடையின்றி நடந்து வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
துரைமுருகன் கூட்டத்தில் இருந்து பாதியில் சென்றதற்கான உண்மையான காரணத்தையும் ஐடி விங் தெளிவுபடுத்தியுள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி, அவருக்குத் தொற்று பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட்ட நெரிசலில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
அவர் கட்சி அலுவலகத்திற்கு வந்ததே அங்குள்ள அன்றாட அலுவலகப் பணிகளை கவனிப்பதற்காக மட்டுமே என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது அலுவலக வேலைகளை முழுமையாக முடித்துவிட்டு, கூட்ட நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்கும் நோக்கிலேயே அவர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டார் என்றும், மற்றபடி பரப்பப்படும் செய்திகளில் உண்மை இல்லை என்றும் அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
