திண்டுக்கல்லில் நடைபெற்ற திமுக கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட திமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி, தமிழக அரசு மற்றும் முதலமைச்சரின் செயல்பாடுகள் குறித்துக் காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கிழக்கு மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ மற்றும் மேற்கு மாவட்டச் செயலாளர் சக்கரபாணி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 500-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.பெரியசாமி, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் நடத்தப்பட்டு வரும் லஞ்ச ஒழிப்புச் சோதனைகள் குறித்துப் பேசினார். “அரசாங்கம் அவர்கள் கையில் இருப்பதால் இத்தகைய சோதனைகளை நடத்துகிறார்கள். 75 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட திமுக, எத்தனையோ சோதனைகளையும் வழக்குகளையும் கடந்து வந்த இயக்கம். இதையெல்லாம் சட்டரீதியாகவும் நீதிமன்றம் மூலமாகவும் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்” என்று அவர் உறுதியளித்தார்.
தொடர்ந்து தமிழக அரசின் செயல்பாடுகளைச் சாடிய அவர், முதலமைச்சர் விஜய் முக்கிய விவகாரங்களில் மௌனம் காப்பதாகக் குற்றம் சாட்டினார். “தமிழக முதலமைச்சர் விஜய் மக்கள் பிரச்சனைகளிலோ அல்லது பாஜக அரசு தொடர்பான விவகாரங்களிலோ வாய் திறப்பதே இல்லை. மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.3,000 கோடி கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ளது. தாய்மொழியான தமிழும், இணைப்பு மொழியான ஆங்கிலமும் மட்டுமே நமக்கு போதுமானது; மூன்றாவது மொழி தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நின்று குரல் கொடுக்க முதலமைச்சர் தவறிவிட்டார்” என்றார்.
சட்டமன்றத்தில் நடைபெறும் விவாதங்களின் போது முதலமைச்சர் பதிலளிக்காமல் அமைதி காப்பது ஜனநாயகத்திற்கு அழகல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். “சட்டமன்றத்தில் காரசாரமான வாதங்கள் வரும்போது, முதலமைச்சராகப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது. ஆனால், அவர் அமைதியாக இருந்துவிட்டு, மற்ற அமைச்சர்களைப் பேசச் சொல்கிறார். அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பு என்றாலும், தொடர்ச்சியாகத் தவறுகளை மறைக்க மற்றவர்களை முன்னிறுத்துவது சரியாக இருக்காது. மக்கள் வைத்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில், அவர்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பவராக முதலமைச்சர் செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
மேலும், தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி கடன் வாங்கி ஆட்சி நடத்துவதாக நிதித்துறைச் செயலாளர் கூறுவது முறையல்ல என்றும் அவர் விமர்சித்தார். “துப்புரவுப் பணியாளர்கள் போராடும்போது பிரச்சனைகளைத் தீர்க்காமல் அமைச்சர்கள் போராட்டத்தில் பங்கேற்பது போல் நடிப்பது ரீல்ஸ் செய்வது போல் உள்ளது. அதேபோல கொள்கை முரண்பாடுகள் நிறைந்த தவெக கூட்டணியின் ஆயுள் ஐந்து ஆண்டுகள் நீடிக்குமா என்பது சந்தேகமே” என்றும் ஐ.பெரியசாமி தனது பேட்டியில் தீவிரமாகக் குற்றம் சாட்டினார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…