“வெட்கம், பயம், கூச்சம் எதுவுமே இல்லையா?”… ஸ்டாலின் தோல்விக்கு இவர் தான் காரணமா?… அறிவாலயத்தை அதிரவைத்த முன்னாள் எம்எல்ஏ-வின் ‘ஷாக்’ ட்வீட்…

By Nanthini on வைகாசி 5, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் திமுகவிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சொந்தக் கோட்டையான கொளத்தூர் தொகுதியில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது அக்கட்சியினரை நிலைகுலையச் செய்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக அசைக்க முடியாத பலத்துடன் இருந்த இத்தொகுதியில் ஏற்பட்ட இந்தச் சரிவு, திமுகவின் தேர்தல் வியூகங்கள் மற்றும் உட்கட்சிப் பூசல்கள் குறித்த விவாதங்களை மீண்டும் ஒருமுறை மேலெழுப்பியுள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், திமுகவின் முன்னாள் எம்எல்ஏ ஐ.பரந்தாமன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை நோக்கி விடுத்துள்ள காட்டமான விமர்சனம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. “நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னது இதைத்தானா சேகர்பாபு?” என்று நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ள அவர், முதல்வரின் தோல்விக்கு சேகர்பாபுவின் கவனக்குறைவே காரணம் எனச் சாடியுள்ளார். எழும்பூர் தொகுதியில் தமக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு சேகர்பாபுதான் பின்னணியில் இருந்தார் என்ற அதிருப்தியில் இருந்த பரந்தாமன், தற்போது இந்தத் தோல்வியைக் கொண்டு அவரை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

   

பரந்தாமன் தனது பதிவில், “அப்பழுக்கற்ற அரசியல் தலைவரின் தோல்விக்குக் காரணமானவர் மீது தலைமைக்கழகம் தயவு தாட்சன்யம் இன்றி நடவடிக்கை எடுத்தால்தான் உண்மைத் தொண்டன் நிம்மதி அடைவான்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி சகஜம் என்றாலும், மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்த தலைவரின் தொகுதியைச் சரியாகக் கவனிக்கத் தவறியது மன்னிக்க முடியாத குற்றம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். “கொஞ்சமும் பயம், கூச்சம் இல்லாமல் தலைவர் முன்பு எப்படி வந்து நிற்கிறீர்கள்?” என்று அவர் கேட்டுள்ள கேள்வி திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

2011 முதல் கொளத்தூரில் தொடர் வெற்றிகளைக் குவித்து வந்த ஸ்டாலினுக்கு, தவெக-வின் எழுச்சியும் வி.எஸ். பாபுவின் வெற்றியும் ஒரு மிகப்பெரிய அரசியல் பாடமாக அமைந்துள்ளது. அண்ணா அறிவாலயமே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீதான இந்த பகிரங்கக் குற்றச்சாட்டுகள் திமுகவிற்குள்ளே ஒரு பெரிய உட்கட்சிப் போராட்டத்திற்கு வித்திட்டுள்ளன. ஆளுங்கட்சியாக இருந்து இத்தகைய பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது குறித்து ஆலோசிக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக தலைமை உள்ளது.