ரூட்டை மாற்றும் தேமுதிக…. திடீரென அந்தர் பல்டி அடித்த பிரேமலதா…. செம குஷியான ஸ்டாலின்…. 2026-ல் மெகா கூட்டணி…!

By Nanthini on தை 25, 2026

Spread the love

தமிழகம் முழுவதும் “உள்ளம் தேடி இல்லம் நாடி” என்ற தலைப்பில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திமுக அரசு குறித்து கருத்து தெரிவித்த அவர், கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் 50 சதவீத நன்மைகள் நடந்துள்ளதாகக் குறிப்பிட்டார். அதே நேரத்தில், இடைநிலை ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள் மற்றும் செவிலியர்களின் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது என்றும், மக்களுக்காகச் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் மீதமுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, பிப்ரவரி 20-ஆம் தேதிக்கு பின்னரே தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால், கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் போதிய கால அவகாசம் இருப்பதாகக் கூறினார். கட்சியின் எதிர்கால நலன் கருதியும், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்களின் விருப்பப்படியும் சரியான நேரத்தில் ஒரு நல்ல முடிவை அறிவிப்பேன் என்று அவர் உறுதியளித்தார். கேப்டன் விஜயகாந்த் தன்னிடம் ஒப்படைத்த பொறுப்பை ஒரு தாயாக இருந்து செவ்வனே நிறைவேற்றுவேன் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

   

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இணையாத கட்சிகளுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு மிக ஆணித்தரமாக பதிலளித்தார். “இது கேப்டன் உருவாக்கிய கட்சி, இந்த கட்சியை யாராலும் மிரட்ட முடியாது, எதுவும் செய்ய முடியாது” என்று கூறினார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை மற்றும் தொண்டர் பலம் இருப்பதாகவும், தங்களுக்கு எது நல்லது என்பதை அந்தந்தக் கட்சிகளே முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், நடிகர் விஜய்யின் படங்களுக்கு அரசியல் நெருக்கடி கொடுக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, அது குறித்து விஜயே நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும் கூறினார்.

   

மதுரையில் தேமுதிக நடத்திய மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாகவும், அது தற்போதைய அரசியல் சூழலில் ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுவதாகவும் பிரேமலதா பெருமிதம் தெரிவித்தார். பிப்ரவரி 3-ஆம் தேதி வரை கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தனது சுற்றுப்பயணத்தைத் தொடர உள்ள அவர், தேர்தல் களத்தில் தேமுதிக ஒரு முக்கிய சக்தியாக விளங்கும் என்பதையும் தனது பேட்டியின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். திமுக அரசின் செயல்பாடுகளைப் பாராட்டிய அதே வேளையில், கட்சியின் தனித்தன்மையையும் அவர் நிலைநிறுத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.