தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, திமுக-விற்கும் காங்கிரஸுக்கும் இடையிலான 10 ஆண்டுகால கூட்டணி அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ், தற்போது விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, திமுக ஐடி விங் “நன்றி, மீண்டும் வராதீர்கள்” எனச் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது.
காங்கிரஸின் இந்த முடிவிற்கு அக்கட்சியினுள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக-வுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்துவிட்டு தற்போது தவெக-வுடன் இணைவது சந்தர்ப்பவாத அரசியல் எனக் கூறி, காங்கிரஸ் முன்னாள் மாநிலச் செயலாளர் தயானந்த் கார்த்திக் மற்றும் பிரனேஷ் பாலாஜி ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மேலும், திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி காங்கிரஸை “நன்றி கெட்டவர்கள்” என்று விமர்சித்துள்ளதோடு, அதிமுக தரப்பும் தவெக-விற்குத் தங்கள் ஆதரவு இல்லை என்பதைத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
