தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர், தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளதால் இந்த இடைத்தேர்தல் களமமைந்துள்ளது. வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், அதிமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் களமிறங்குவது உறுதியாகியுள்ளது. ஆனால், திமுக இதுவரை தனது அதிகாரப்பூர்வ முடிவை அறிவிக்காமல் தயக்கம் காட்டி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது திமுக தலைமையிலான கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ள சூழலில், தனித்து போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் திமுக தலைமை உள்ளதாகக் கருதப்படுகிறது. புதிய கட்சியான தவெக அமைப்பு ரீதியாக அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், மீண்டும் மும்முனைப் போட்டி நிலவினால் அது திமுகவுக்கு சாதகமாக அமையாது என்ற கணக்கீடும் நிலவுகிறது. குறிப்பாக, தவெகவை நேரடியாக எதிர்கொண்டு வீழ்ப்பதை விட, அதிமுகவுக்கு வழிவிட்டு ஒதுங்குவதன் மூலம் விஜய் பிம்பத்திற்குச் பின்னடைவை ஏற்படுத்த முடியும் என்ற வியூகத்தின் அடிப்படையில், தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பது குறித்து திமுக தலைமை தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், இந்த இடைத்தேர்தல் புறக்கணிப்பு முடிவுக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்குவது “விஜய்யின் எழுச்சிக்கு பயந்து திமுக களத்தை விட்டு ஓடிவிட்டது” என்ற எதிர்மறையான பிரச்சச்சாரத்திற்கு வழிவகுக்கும் என்றும், அது கட்சியின் பிம்பத்தைப் பெருமளவில் பாதிக்கும் என்றும் அவர் கருதுகிறார். ஒருவேளை திமுக போட்டியிட முடிவு செய்தால், மதுராந்தகம் தொகுதியில் அண்மையில் திமுகவில் இணைந்த பனையூர் பாபுவுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்றும் அறிவாலய வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்த மாறுபட்ட கருத்துகளுக்கு இடையே, கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் திமுக தலைமை நாளைய தினம் அவசர ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், வேட்பாளர்களை நிறுத்துவதா அல்லது இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதா என்பது குறித்து இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ள இந்த இடைத்தேர்தல் குறித்த அறிவாலயத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பதில் தற்போது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
