திமுக தேர்தல் மற்றும் களப்பணிகளைச் செம்மைப்படுத்தும் நோக்கில், கட்சி அமைப்பை 110 மாவட்டங்களாக உயர்த்திப் பிரிப்பதாகக் கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பை அடிமட்டம் வரை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மறுசீரமைப்பின் கீழ், தலைநகர் சென்னை ஒட்டுமொத்தமாக 10 உட்கட்சி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக வாக்காளர்களைக் கொண்ட சோழிங்கநல்லூர் பகுதி தனி மாவட்ட அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
மேலும், முக்கிய நகரங்களான மதுரை, சேலம் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்கள் தலா 5 கழக மாவட்டங்களாகவும், திருச்சி, கடலூர், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகியவை தலா 4 மாவட்டங்களாகவும் மறுவரையறை செய்யப்பட்டுள்ளன. களப்பணிகளைத் துரிதப்படுத்தவும், நிர்வாக முறையை எளிமையாக்கி மக்களுடனான தொடர்பை அதிகப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, திமுகவின் உள்கட்சி அரசியலிலும் தேர்தல் களத்திலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
