தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் மாற்றத்திற்கும் புதுமைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 60-க்கும் மேற்பட்ட புதிய முகங்களுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சமூகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 29 வழக்கறிஞர்கள், 17 பொறியாளர்கள், 15 மருத்துவர்கள் மற்றும் 7 முனைவர் பட்டதாரிகள் (PhD) எனத் தகுதியான வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
பெண்களுக்கான அங்கீகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் 18 பெண் வேட்பாளர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதுதவிர, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள 11 தோழமைக் கட்சி வேட்பாளர்களும் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே போட்டியிட உள்ளனர். தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களைக் கொண்டு இந்தத் தேர்தலைச் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இது வெற்றிக்கான வலுவான அடித்தளம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
