தமிழ்நாட்டில் வருகிற நான்காம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் தொடங்கப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வருகிற 2-ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தி.நகரில் உள்ள அக்கார்டு நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு திமுக கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் இல்லாமல் கூட்டணியில் இல்லாத கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்க முதலமைச்சராக மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த வகையில் திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, ஆஸ்டின் ஆகியோர் ஒவ்வொரு கட்சியின் தலைவர்களின் அலுவலகங்களுக்கு சென்று அழைப்பு கடிதம் கொடுத்து வருகின்றனர். 60 கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய மூன்று பேர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று திமுக தலைமை நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
