தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக அலுவலகம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு பிரம்மாண்ட வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்தது. இந்தப் பகுதியில் தவெகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா தனது ‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ (Voice of Commons) நிறுவனத்தை நடத்தி வந்தார். பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான இந்த இடத்தில் தான், நடிகர் விஜய்யின் கட்சியின் ஒட்டுமொத்த தேர்தல் வியூகங்களும் வகுக்கப்பட்டு வந்தன.
திடீரென அந்த அலுவலகத்தை உடனடியாக காலி செய்யச் சொல்லி அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் வரை அதே இடத்தில் இயங்க அனுமதிக்குமாறு ஆதவ் அர்ஜுனா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட போதிலும், உடனடியாக வெளியேற வேண்டும் என்பதில் அந்த இடத்தின் உரிமையாளர் தரப்பு உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. இதனால் வேறு வழியின்றி தவெக தனது ஒட்டுமொத்த வியூக அலுவலகத்தையும் காலி செய்துவிட்டு மாற்று இடத்தைத் தேடி வருகிறது.
இந்தத் திடீர் நெருக்கடியின் பின்னணியில் ஆளுங்கட்சியான திமுக இருப்பதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர். மார்ட்டின் தரப்புக்கு அரசியல் ரீதியான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாலேயே, அவர்கள் தவெகவை வெளியேறச் சொல்வதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது தீவிரமான தேர்தல் பணிகள் ஆளுங்கட்சிக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், இத்தகைய முட்டுக்கட்டைகள் போடப்படுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தேர்தல் நெருங்கும் வேளையில், கட்சியின் மிக முக்கியமான ஒரு அலுவலகத்தை காலி செய்ய நேரிட்டது தவெகவுக்குச் சவாலாக அமைந்துள்ளது. இருப்பினும், இத்தகைய நெருக்கடிகளைத் தாண்டி அடுத்தகட்டப் பணிகளைத் தொய்வின்றி முன்னெடுக்க விஜய் தரப்பு திட்டமிட்டுள்ளது. விரைவில் சென்னை அல்லது அதன் புறநகர்ப் பகுதியில் புதிய மற்றும் பாதுகாப்பான இடத்தில் தேர்தல் வியூக அலுவலகம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
