திமுக கூட்டணியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கிடையே நிலவும் ஒருவித மந்தமான போக்கு அறிவாலயத்தை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், மற்ற இடங்களில் திமுக வேட்பாளர்களுக்காகப் பணியாற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. “சீட் வாங்கும் போது காட்டிய பிடிவாதம், களத்தில் வேலை செய்யும்போது காணவில்லையே” என திமுக உடன்பிறப்புகள் புலம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சத்தியமூர்த்தி பவன் சிப்பாய்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட எல்லைக்கோட்டைத் தாண்டி வராதது ஒருபுறமிருக்க, கம்யூனிஸ்ட்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற மற்ற தோழமைக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்கள் நிற்கும் இடங்களைத் தாண்டி வாக்குச் சேகரிக்கத் தயங்குவதாகப் பார்க்கப்படுகிறது. ஸ்டாலின் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கோடு ஓடிக்கொண்டிருக்க, கூட்டணிக் கட்சிகளோ ஒரு ‘தனித்தீவு’ கணக்காகச் செயல்படுவது கூட்டணி தர்மத்திற்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ராகுல் காந்தி வரும்போது மட்டும் உற்சாகமாகும் காங்கிரஸ் நிர்வாகிகள், மற்ற நேரங்களில் களப்பணியில் ஈடுபடுவதில்லை என்ற குற்றச்சாட்டும் வலுத்துள்ளது.
இந்த மந்தமான சூழலுக்கு மத்தியில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் அதிரடிப் பிரசாரம் திமுகவினரையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. கூட்டணியில் 10 இடங்களை மட்டுமே பெற்றிருந்தாலும், தன் கட்சி வேட்பாளர்களுக்காக மட்டுமன்றி திமுக வேட்பாளர்களுக்காகவும் அவர் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு வருகிறார். “ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வர்” என்று அவர் மேடைதோறும் முழங்குவது உடன்பிறப்புகளுக்குப் புதிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளதுடன், கேப்டன் விஜயகாந்த் காலத்து வேகத்தை நினைவூட்டுவதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
செல்லும் இடமெல்லாம் தேமுதிக தொண்டர்கள் உதயசூரியன் சின்னத்தையும் சேர்த்து ஏந்தி நிற்பது உண்மையான கூட்டணி ஒற்றுமையைப் பிரதிபலிக்கிறது. பிரேமலதாவின் கம்பீரமான பேச்சும், களப்பணியும் தேமுதிகவின் வாக்கு வங்கியை வலுப்படுத்தும் சக்தியாக உருவெடுத்துள்ளது. மற்ற கூட்டணிக் கட்சிகள் இதே வேகத்தைக் காட்டத் தவறினால், ‘கூட்டணி பலம்’ என்பது வெறும் காகிதத்தோடு முடிந்துவிடும் என்று திமுகவின் மூத்த நிர்வாகிகள் எச்சரிக்கின்றனர். வாக்கு சேகரிப்பதில் தோழமைக் கட்சிகள் காட்டும் வேகமே வரும் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும்.
