தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. கட்சியின் 20 ஆண்டுகால வரலாற்றில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைப்பது இதுவே முதல்முறை என்பதால் அரசியல் வட்டாரத்தில் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கூட்டணியில் தேமுதிகவுக்கு 7 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா இடமும் வழங்க திமுக சம்மதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேமுதிக தரப்பில் தங்களுக்கு செல்வாக்கு உள்ள 20 தொகுதிகளின் பட்டியலை திமுக தலைமையிடம் வழங்கியுள்ளனர். இதில் கும்மிடிப்பூண்டி, விருகம்பாக்கம், பல்லாவரம், கே.வி.குப்பம், விழுப்புரம், விக்கிரவாண்டி, ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, விருத்தாச்சலம், கடலூர், நெய்வேலி, சேலம் தெற்கு, சிங்காநல்லூர், கோவை வடக்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், சாத்தூர், விருதுநகர் மற்றும் சிவகாசி ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த 20 தொகுதிகளில் இருந்து தேமுதிகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலில் போட்டியிடப்போகும் உத்தேச வேட்பாளர் பட்டியலும் தற்போது கசிந்துள்ளது. அதன்படி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் அல்லது ரிஷிவந்தியம் தொகுதியிலும், அவரது மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் அல்லது சிவகாசி தொகுதியிலும் களம் இறங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விருகம்பாக்கத்தில் பார்த்தசாரதி, விழுப்புரத்தில் எல். வெங்கடேசன் மற்றும் பல்லாவரத்தில் அனகை டி. முருகேசன் ஆகியோர் போட்டியிடத் தயாராக உள்ளதாகத் தெரிகிறது.
கூட்டணி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வழங்கப்படும் ராஜ்யசபா இடத்திற்கு, தேமுதிக பொருளாளரும் பிரேமலதாவின் சகோதரருமான எல்.கே. சுதீஷ் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக என நான்கு முனைப் போட்டி நிலவும் சூழலில், தேமுதிகவின் இந்த வரவு திமுக கூட்டணிக்குக் கூடுதல் பலத்தை அளிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
