தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இப்படியான சூழலில் மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்துடன் மாநாடு நடைபெற்றது. மதுரையின் புறநகர் பகுதியான பாரபத்தியில் சுமார் 506 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது.
மாநாட்டில் விஜய் இதுவரை விமர்சிக்காத அதிமுகவை கூட விமர்சித்தார். ஆனால், கேப்டன் விஜயகாந்தை பாராட்டி பேசியதில் அரசியல் கணக்கு இருப்பதாக பார்க்கப்படுகிறது. மேலும் ‘விஜய் எங்கள் வீட்டு பையன், எங்களுக்கு தம்பிதான்’ என்று தேமுதிக பிரேமலதாவும் தெரிவித்துள்ளார். இதனால், தவெக – தேமுதிக கூட்டணி உருவாகும் என பேச்சு அரசியல் வட்டாரத்தில் அடிபடுகிறது. மேலும் ஜன. 9 தேமுதிக மாநாட்டில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்றும் பேசப்படுகிறது.
