தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளதால் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கிவிட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் பலமுனை போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணி ஒரு பக்கம் வலுவாக உள்ளது. மற்றொரு பக்கம் எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அரசியலுக்கு புதிதாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தனித்து களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. வழக்கம்போல சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடவே அதிக வாய்ப்புள்ளது.
இப்படியான நிலையில் திமுக மற்றும் அதிமுக வரிசையில் தற்போது தேமுதிகவும் இணைந்துள்ளது. ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்துடன் திமுக, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் அதிமுக பரப்புரையை தொடங்கிவிட்டது. இதனைத் தொடர்ந்து 2026 தேர்தலை முன்னிட்டு “உள்ளம் தேடி, இல்லம் நாடி” என்ற முழக்கத்துடன் வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தொடர்ச்சியாக 20 நாட்கள் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பரப்புரை செய்கிறார்.
