சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார். தொண்டர்களுடன் இணைந்து பொங்கல் வைத்த அவர், பின்னர் மறைந்த தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கையோடு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாகத் தெரிவித்தார்.
கூட்டணி குறித்துப் பேசிய அவர், தற்போது வரை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கிய கட்சிகளும் தங்களது கூட்டணிகளை இறுதி செய்யாத நிலையில், தேமுதிகவும் பொறுமையாகச் சிந்தித்து மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு மகத்தான முடிவை எடுக்கும் என்று கூறினார். கட்சி நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனைகள் நடத்திய பிறகு, எந்தெந்தத் தொகுதிகளில் தேமுதிக போட்டியிடும் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். மேலும், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டம் குறித்துப் பேசிய அவர், அரசு இவற்றுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
