தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறார். ஏற்கனவே அக்கட்சிக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்பட்ட நிலையில், தற்போது அடுத்தக்கட்டமாக தொகுதி பங்கீட்டிலும் தேமுதிகவிற்கு சாதகமான சூழலை உருவாக்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, கடலூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான விருத்தாச்சலம் தொகுதியை தேமுதிகவிற்கு ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜயகாந்த் முதன்முதலில் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி என்பதால், விருத்தாச்சலம் தேமுதிகவிற்கு மிகவும் உணர்வுப்பூர்வமான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாகும். கடந்த காலங்களில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ள இந்த தொகுதியில், தற்போது பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகப் பேசப்படுகிறது. வன்னியர் வாக்குகள் அதிகம் உள்ள இந்த தொகுதியில், தற்போதைய அரசியல் சூழலைப் பயன்படுத்தி எளிதில் வெற்றி பெறலாம் என தேமுதிக தரப்பு கணக்கு போடுகிறது.
அதேவேளையில், இந்த முடிவு திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருத்தாச்சலம் தொகுதியில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவாக உள்ளார். அவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அந்தத் தொகுதி தேமுதிகவிற்கு வழங்கப்படுவது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் திமுக எடுக்கும் இத்தகைய முடிவுகள், காங்கிரஸ் உள்ளிட்ட பிற தோழமைக் கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
திமுகவின் இந்த நடவடிக்கை, கூட்டணிக்குள் தேமுதிகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளதையே காட்டுகிறது. கடந்த கால தேர்தல்களில் தேமுதிக பெற்ற வாக்கு சதவீதத்தை விட, தற்போது அக்கட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் தாராளம் காட்டுவது கூட்டணி வட்டாரங்களில் விவாதத்தை உருவாக்கியுள்ளது. விருத்தாச்சலம் தொகுதியைத் தேமுதிக கைப்பற்றுமா? அல்லது இந்த தொகுதி பங்கீடு கூட்டணிக்குள் மேலும் சிக்கல்களை உருவாக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
