அதிமுகவுடன் கூட்டணி..? ரகசியமாக காய் நகர்த்தும் தேமுதிக… பிரேமலதாவின் திடீர் சந்திப்பால் பரபரப்பு…!!

By Soundarya on மாசி 16, 2026

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி நிலைப்பாட்டை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், கோவையில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கோவை ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி 15 அன்று நடைபெற்ற இந்த நிகழ்வில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும், பிரேமலதா விஜயகாந்தும் அருகருகே அமர்ந்து நீண்ட நேரம் உரையாடினர். முன்னதாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு தரப்புடனும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான தகவல்களை பிரேமலதா மறுத்திருந்தாலும், இந்தச் சந்திப்பு அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்வதை உறுதி செய்யும் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், கூட்டணி குறித்த இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கௌரவமான தொகுதிகளும், அதிகாரத்தில் பங்கும் அளிக்கும் கட்சியுடனேயே கூட்டணி அமையும் என அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில், ஈஷா மையத்தில் நடந்த இந்த ‘ஆன்மீக ரீதியிலான’ சந்திப்பு, அதிமுக மற்றும் தேமுதிக இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஒரு முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது. இருப்பினும், வரும் பிப்ரவரி 20-ஆம் தேதிக்குப் பிறகே தேர்தல் குறித்த தெளிவான முடிவுகளை அறிவிக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.