தேமுதிக மற்றும் திமுக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திமுக தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட 6 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் என்ற கோரிக்கையை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்த் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி உறுதியானபோதும் அவர் இதே கோயிலில் தரிசனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியலில் விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு தேமுதிக சந்திக்கும் மிக முக்கியமான தேர்தல் இதுவாகும். கடந்த சில தேர்தல்களில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்த தேமுதிகவை மீண்டும் வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சித் தலைமை உள்ளது. அதிமுக தரப்பில் அதிக தொகுதிகள் பேசப்பட்டாலும், அரசியல் உறுதித்தன்மை மற்றும் வெற்றி வாய்ப்பைக் கருதி திமுக கூட்டணியை பிரேமலதா தேர்வு செய்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்தக் கூட்டணியில் பிரேமலதாவின் மகன் விஜய பிரபாகரனின் அரசியல் எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் விஜய பிரபாகரன் போட்டியிட ஒரு தொகுதியை தேமுதிக கோரியுள்ளதாகவும், அதற்கு திமுக தலைமை பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய பிரபாகரன் ஒருவேளை தேர்தலில் வெற்றி பெற்றால் அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்வார், இல்லையெனில் அவருக்கு ராஜ்யசபா வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேமுதிகவின் இந்தத் திடீர் முடிவு தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாநாட்டிற்குப் பிறகு சுமார் 20 நாட்களாகக் கூட்டணி குறித்து மௌனம் காத்து வந்த பிரேமலதா, தற்போது திமுக பக்கம் சாய்ந்திருப்பது மற்ற கூட்டணிக் கட்சிகளிடையே விவாதத்தை உண்டாக்கியுள்ளது. விஜய பிரபாகரன் அல்லது எல்.கே.சுதீஷ் ஆகிய இருவரில் ஒருவருக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட வாய்ப்புள்ள நிலையில், இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
