தமிழகத்தில் தற்பொழுது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் சி.ஜே.விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிராக, பிரபல நடிகரும் அரசியல் பிரமுகருமான சத்யராஜின் மகளும், திமுகவின் நட்சத்திரப் பேச்சாளருமான திவ்யா சத்யராஜ் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ், தற்போதைய தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தவில்லை என்று சாடினார். மாறாக, சமூக வலைதளங்களில் தங்களை விமர்சிப்பவர்களை 3 மணி நேரத்திற்குள் தேடிப் பிடித்து கைது செய்வது போன்ற விளம்பர அரசியலில் மட்டுமே இந்த அரசு வேகம் காட்டி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் தனது உரையில் அடுக்கடுக்கான பரபரப்பு புகார்களைக் குறிப்பிட்ட திவ்யா சத்யராஜ், “முதலமைச்சர் விஜய்க்கு ஒரு அடியாள் உள்ளார்; அவர் சமூக வலைதளங்களில் மாபியாக்களை உருவாக்கி பெண்களை அவதூறாகப் பேச வைக்கிறார்” என்று பகிரங்கமாகத் தெரிவித்தார். சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தற்பொழுது அதிக அளவில் நடைபெற்று வருவதாகக் கவலை தெரிவித்த அவர், முதலமைச்சரின் பின்னணியில் இருக்கும் நபர்களே இதற்கு முக்கியக் காரணம் என்று சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, சினிமாவில் பெரிய நடிகர்களுடன் நடிக்க வைப்பதாகக் கூறி, ‘ஜெ’ என்ற எழுத்தில் தொடங்கும் முதலமைச்சரின் அடியாள் பலரின் வாழ்க்கையைக் கெடுத்துள்ளதாக திவ்யா சத்யராஜ் மிக அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பெரிய கனவுகளோடு திரைத்துறைக்கு வரும் பெண்களை, சினிமாவில் வாய்ப்புத் தருகிறேன் என ஏமாற்றி அந்த அடியாள் பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்துள்ளதாக அவர் கூறினார். தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இப்புகார், தற்பொழுது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது
