திமுக எம்பியும் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் தவெக ஆட்சியையும் அதன் தலைவரான முதலமைச்சர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மதுபோதையில் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு அளித்ததாகவும் வரும் செய்திகளைக் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதனால் ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மக்கள் பிரதிநிதியாக இருக்கும் ஒருவரால் மாவட்ட நிர்வாகத்தின் தலைவருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுப் போய்விட்டதாகக் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் அந்த ஆட்சியருக்கு முழுமையான பாதுகாப்பைக் கொடுத்துவிட முடியாது எனக் குறிப்பிட்ட அவர், “முதலமைச்சர் விஜய் அவர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?” என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். கனிமொழியின் இந்த காரசாரமான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
