மக்களே உஷார்… “எலுமிச்சம் பழம் வச்சு மந்திரம் செய்வோம்…” மிரட்டி பணம் பறித்த போலி சாமியார் கும்பல்… ஒரே ஒரு வாட்ஸ்அப் பதிவு…போலீஸ் அதிரடி ஆக்சன்… ராஜஸ்தான் கொள்ளையர்களுக்கு நேர்ந்த கதி…!

By Visaka on ஆடி 26, 2026

Spread the love

கோவையில் சாமியார் வேடமணிந்து வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களை நோட்டமிட்டு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் பொதுமக்களின் விழிப்புணர்வால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். சூலூர் அடுத்த சின்னியம்பாளையம் பகுதியில் செயல்படும் ஹாலோ பிளாக் நிறுவனத்திற்குள் கடந்த ஜூலை 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் சாமியார் வேடத்தில் நுழைந்த இந்த மர்மக் கும்பல், தண்ணீர் கேட்பது போல் நடித்து மேஜையில் இருந்த ஐயாயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றுள்ளது.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதிர்ச்சியடைந்த நிறுவனத்தின் உரிமையாளர், அந்த வீடியோ ஆதாரத்தை உள்ளூர் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்து அனைவரையும் எச்சரித்ததோடு நீலாம்பூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். இந்நிலையில், அன்னூர் சாலையில் காரில் சென்று கொண்டிருந்த உள்ளூர்வாசி ஒருவர், வாட்ஸ்அப்பில் பகிரப்பட்ட அதே கார் தனக்கு முன்னால் செல்வதைக்கண்டு உடனடியாக உஷாரடைந்துள்ளார்.

   

உடனே தனது நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்து கருமத்தம்பட்டி நான்கு ரோடு சந்திப்பில் அந்தச் சாமியார்கள் வந்த காரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதும், எலுமிச்சம்பழம் வைத்து மந்திரம் செய்வதாகப் பயமுறுத்திப் பணம் பறிப்பதும் தெரியவந்துள்ளது. வாட்ஸ்அப் விழிப்புணர்வு மெசேஜ் மூலம் இந்தக் கொள்ளைக் கும்பல் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.