டோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளார். ராஜமவுலி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் கொரட்டல்லா சிவா உடன் இணைந்து தேவரா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ரிலீசாக உள்ளது. இதனைத் தொடர்ந்து படத்தின் ப்ரோமோஷனில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டனர்.
தன்னுடைய பேட்டிகளில் விஜய் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட கோலிவுட் பிரபலங்கள் குறித்து பேசிய ஜூனியர் என்டிஆர், தான் வெற்றிமாறனுடன் நேரடி தமிழ் படத்தில் நடிக்க விரும்புவதாகவும் அந்த படத்தை தெலுங்கில் டப்பிங் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தெலுங்கின் முன்னணி ஹீரோவான ஜூனியர் என்டிஆரின் இந்த விருப்பம் குறித்து இயக்குனர் வெற்றிமாறனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த வெற்றிமாறன், ஆம் இதற்கு முன்பே நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். தற்போது இயக்கி வரும் விடுதலை 2 உள்ளிட்ட படங்களை நிறைவு செய்துவிட்டு ஜூனியர் என்டிஆர் உடன் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளார். அவரிடம் முன்னதாகவே ஸ்கிரிப்ட் ஒன்றை சொல்லி ஓகே வாங்கி உள்ளதையும் வெற்றிமாறன் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மீண்டும் அவரை சந்தித்து பேச உள்ளதாக வெற்றிமாறன் கூறியுள்ள நிலையில் ஜூனியர் என்டிஆர் உடன் வெற்றிமாறன் இணைய உள்ளது உறுதியாகி உள்ளது.