தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த வாரத்தில் திரைப்பட விருதுகள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளுக்காக சிறந்த படங்கள் சிறந்த நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் குறித்து அறிவிப்பு வெளியானது. ஆனால் இதில் மக்களால் கொண்டாடப்பட்ட நல்ல படங்கள் என்று பாராட்டப்பட்ட பல படங்கள் இடம்பெறவில்லை.
ரிலீஸ் ஆகாத சண்டைக்காரி என்ற படத்துக்கு மட்டும் 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்படி பல குளறுபடிகளும் பாரபட்சமும் இந்த விருதுகள் பட்டியிலில் இருந்ததாக புகார் எழுந்துள்ளது.இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுசீந்திரன்.
அவர் இதுகுறித்து வெளியிட்ட ஒரு பதிவில், வெண்ணிலா கபடிக்குழு நான் மகான் அல்ல அழகர்சாமியின் குதிரை (தேசிய விருது) ஆதலால் காதல் செய்வீர் பாண்டியநாடு ஜீவா மாவீரன் கிட்டு இந்த 7 திரைப்படங்களும் மக்கள் பத்திரிகை நண்பர்கள் ஊடக நண்பர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. எனினும் எனக்கு எந்த படத்திற்கும் தமிழக அரசு விருது அளிக்காதது ஆச்சரியம் அளிக்கிறது என்று இயக்குனர் சுசீந்திரன் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.
