கே பாலச்சந்தர் தமிழ் சினிமாவில் 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலமாக ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகும் அவரை மூன்று முடிச்சு மற்றும் அவர்கள் ஆகிய படங்களில் நடிக்கவைத்தார். ஆனால் அனைத்துமே வில்லன் வேடம்தான். 1975ல் இருந்து 78 வரை ரஜினி பல படங்களில் வில்லனாக நடித்து வந்தார். ஆனாலும் அவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அவரை வில்லனாக மட்டும் இல்லாமல் ரசிகர்கள் வேறு மாதிரி ரசித்தார்கள்.
அதைப் புரிந்துகொண்ட கலைஞானம்தான் ரஜினியைக் கதாநாயகனாக்கி பைரவி என்ற படத்தைத் தயாரித்தார். அந்த படம் நல்ல வெற்றியைப் பெற்றுத் தந்தது. ரஜினியை ஹீரோவாக மாற்றியது கலைஞானம் எனில், அவரை ஸ்டாராக மாற்றியது எஸ்.பி.முத்துராமன்தான்.1975 முதல் 80 கள் வரை ரஜினி ஹீரோ, வில்லன் என கலந்துகட்டி நடித்துக்கொடிருந்த போது முத்துராமன்தான் அவரை கமர்ஷியல் அந்தஸ்துள்ள சூப்பர் ஸ்டார் நடிகராக்கினார்.
80 களுக்கு பிறகு கமல்ஹாசனை மிஞ்சி தமிழ் சினிமாவின் வசூல் மன்னாக மாறினார் ரஜினி. அவரின் தோல்விப் படங்கள் கூட தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை என்ற நிலையில் இருந்தன. ரஜினி தமிழில் ஹீரோவாக நடித்தாலும் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.
90 களில் ரஜினியின் மார்க்கெட் புதிய உச்சத்தைத் தொட்டது. அதில் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக அமைந்தது பாட்ஷா திரைப்படம். அந்த படத்தின் வெற்றியால் அதே திரைக்கதை பார்மட்டில் 10க்கும் மேற்பட்ட படங்கள் வெவ்வேறு நடிகர்களை வைத்து உருவாகின.
இந்த படம் பற்றி ஒரு ஆச்சர்ய தகவலை பகிர்ந்துள்ளார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. அதில் “பாட்ஷாவுக்கு முன்பு வரை ரஜினி சாருக்கு தெலுங்கில் மார்க்கெட்டே இல்லை. அவர் படங்கள் தெலுங்கில் ஓடவே ஓடாது. அதனால் பாட்ஷா படத்தை குறைவான விலைக்குதான் விற்றார்கள். ஆனால் படம் சூப்பர் ஹிட்டானது. அதன் பிறகுதான் ரஜினி சாருக்கு நிலையான தெலுங்கு மார்க்கெட் உருவானது. எல்லா படங்களும் தெலுங்கில் டப் செய்யப்பட்டன” எனக் கூறியுள்ளார்.