தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது.
அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார். அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் வெற்றிதான். அதிலிருந்து இப்போது வரை தமிழ் சினிமாவின் மாஸ் மகாராஜாவாக இருக்கிறார். தற்போது தன்னுடைய 73 வயதிலும் தன்னுடைய அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய், அஜித் ஆகியோருக்கு போட்டியாக களத்தில் நிற்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அவரின் அடுத்த படமான ‘ஜெயிலர் 2’ படத்தின் அறிமுக முன்னோட்ட வீடியோ வெளியானது. அதில் சில ஷாட்களில் நடித்திருப்பது ரஜினியே இல்லை என்றும் டூப் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து அந்த கிள்ம்ப்ஸ் வீடியோவின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம், அதில் ரஜினிகாந்த் நடித்துள்ளதை உறுதி செய்தது.

ரஜினிகாந்தின் ஸ்டைலை தமிழ்நாட்டில் ரசிக்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்துபவர் ரஜினி. ஆனால் தமிழ் சினிமாவில் ஜாம்பவான் இயக்குனர் எனப் புகழப்பட்ட ஸ்ரீதர், இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் ரஜினியை இயக்கிய போது அவரின் நடிப்பை ரசிக்கவில்லையாம்.
இதை இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “ஸ்ரீதர் சார், அந்த படத்தின் ஷூட்டிங் போது ‘இவன் என்னைய்யா பைத்தியம் மாதிரி பண்ணுகிறான்” என்பாராம். அதே போல மாடிப்படியில் ரஜினி ஸ்டைலாக நடந்துகொண்டே வசனம் பேசினா, ஒன்று அவரை மாடி மேல் நின்று கொண்டு பேச சொல்லு. இல்லை என்றால் இறங்கி விட்டு பேச சொல்லு’ என நக்கலடிப்பாராம்” எனக் கூறியுள்ளார்.
