தவெக-வில் திடீர் என்ட்ரி?….. “விஜய் முதலமைச்சர் ஆனதுல மகிழ்ச்சி… ஆனா அதுமட்டும் தான் வருத்தம்”…. ஓப்பனா பேசிய சசிகுமார்…..!

By Nanthini on ஆடி 31, 2026

Spread the love

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும் நடிகருமான சசிகுமார், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகக் கடந்த சில நாட்களாகச் செய்திகள் பரவி வந்தன. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “இது முற்றிலும் பொய்யான வதந்தி; எனக்கு அரசியல் வராது, அரசியலைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்று அழுத்தமாகக் கூறி அந்தச் செய்திகளை அடியோடு மறுத்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து முதலமைச்சராக உயர்ந்திருப்பது குறித்துப் பேசிய சசிகுமார், “அவரது சுய நம்பிக்கையும் உழைப்புமே இந்த வெற்றிக்குக் காரணம். குறுகிய காலத்தில் ஒரு கட்சியைத் தொடங்கி, இந்த இலக்கை அவர் எட்டியிருப்பது அவருக்கு மட்டுமே உரித்தான தனிச்சிறப்பு. அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” எனத் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

   

அதேவேளையில், ஒரு இயக்குனராகத் தமக்கு இருக்கும் ஒரே ஏமாற்றத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார். விஜய்யை வைத்து ஒரு பிரம்மாண்ட வரலாற்றுச் படத்தை இயக்கத் திட்டமிட்டு இருந்ததாகவும், எம்பி சு.வெங்கடேஷ் எழுதிய அந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்துப்போய் அவரே தயாரிப்பாளரையும் ஏற்பாடு செய்து கொடுத்ததாகக் குறிப்பிட்டார். படத்திற்கான முதற்கட்ட இடங்களை (Locations) தேர்வு செய்து முடித்த போதிலும், அதிக பட்ஜெட் காரணத்தால் அப்போதே அப்பணியைத் தொடங்க முடியாமல் போனதாக வருத்தத்துடன் கூறினார்.

   

பாலாவின் உதவியாளராகத் திரையுலகில் நுழைந்து, ‘சுப்ரமணியபுரம்’ மற்றும் ‘ஈசன்’ போன்ற படங்களின் மூலம் முத்திரை பதித்த சசிகுமார், அதன்பின் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். விஜய்யை வைத்து அவர் இயக்க முயன்ற அந்த வரலாற்றுப் படம் ‘வேள்பாரி’ தான் என்று திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், விஜய் அரசியல் பயணத்தைத் தொடர்ந்ததால் அப்படம் கைநழுவிப் போனது ரசிகர்களிடையேயும் பெரிய எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.