நாகேஸ்வரன் என்ற இயற்பெயரை கொண்ட நாகேஷ் கன்னட பிராமண குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது பற்று கொண்ட நாகேஷ் அமேச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். 1959 ஆம் ஆண்டு தாமரைக் குளம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நாகேஷ்.
பிறகு சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த நாகேஷ் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் தோன்றிதன் மூலம் பிரபலமானார். இவருடன் பல திரைப்படங்களில் நகைச்சுவைக்கு ஜோடியாக நடித்தவர் மனோரமா என்பது குறிப்பிடத்தக்கது.
பாலச்சந்தர் கதை வசனம் எழுதி இயக்கிய சர்வர் சுந்தரம் என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து குணச்சித்திரன் நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார். இத்திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி தான் சிறந்த நடன கலைஞன் என்பதையும் நிரூபித்திருப்பார் நாகேஷ். திருவிளையாடல் படத்தில் தருமி கதாபாத்திரத்தில் இவர் நடித்தது இன்றளவும் போற்றப்படுகிறது.
தமிழ் திரைப்பட உலகில் நகைச்சுவை நடிகர், குணசித்திர நடிகர் மற்றும் துணை நடிகர் ஆகிய வேடங்களில் நடித்து பிரபலமான நாகேஷ் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, கன்னட ஆகிய மொழிகளில் சேர்த்து 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். நாகேஷ் அவர்களுக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக ஒரே டேக்கில் நடித்து முடித்துக் கொடுப்பவராக இருந்திருக்கிறார். கே பாலச்சந்தருக்கு பிடித்தமான நடிகர்களில் நாகேஷும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படி ஒரு படப்பிடிப்பின் போது சுவாரசியமான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. 1963 ஆம் ஆண்டு எஸ் எஸ் ஆர், விஜயகுமாரி, எம் ஆர் ராதா, நாகேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் நானும் ஒரு பெண். இந்த திரைப்படத்தில் ஒரு எமோஷனலான காட்சி இருந்திருக்கிறது. அதில் நாகேஷை நடிக்க வைக்க தயங்கி இருக்கிறார் இயக்குனர்.
இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியின் அண்ணனாக நாகேஷ் நடித்திருப்பார். கதாநாயகியின் கல்யாணம் நின்றுவிடும் போது எமோஷனலாக சீன் நடிக்க வேண்டும். அப்போது நாகேஷ் நகைச்சுவை நடிகராக இருந்ததால் அவர் இந்த சீனில் நடிக்க வேண்டாம். அப்படி நடித்தால் மக்கள் சிரித்து விடுவார் என்று டைரக்டர் வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அதை ஒத்துக்கொள்ளாமல் அடம்பிடித்த நாகேஷ் எமோஷனல் சீனில் கச்சிதமாக நடித்து செட்டில் இருந்து அனைவரின் பாராட்டுகளையும் கைதட்டுகளையும் பெற்றிருக்கிறார்.