மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் மம்மூட்டி. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர் ஒரு வழக்கறிஞராக இருந்தாலும் கலைமீது தீராத ஆர்வம் கொண்டிருந்த காரணத்தால் சினிமாவில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று ஆர்வத்தோடு இருந்துள்ளார். 1971 ஆம் ஆண்டு அனுபவங்கள் பாலி சிக்கல் என்ற திரைப்படம் மூலமாக தான் இவர் முதல் முறையாக சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு 1976 ஆம் ஆண்டு எம்டி வாசுதேவன் நாயரின் அறிமுகம் கிடைத்தது.

தொடர்ந்து அவருடைய இயக்கத்தில் தேவலோகம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் மம்முட்டியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து அவர் நடித்த படங்கள் வரிசையாக சூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் முன்னணி ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றார். மலையாளத் திரை உலகில் இவர்தான் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த ஹீரோ. மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்தாலும் தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவருடைய நடிப்பில் வெளியான மௌனம் சம்மதம் மற்றும் அழகன் ஆகிய திரைப்படங்கள் தமிழில் மெகா ஹிட் கொடுத்தன. அதனைப் போலவே தமிழில் இவர் நடித்த மறுமலர்ச்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மற்றும் ஆனந்தம் உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். தற்போது மலையாள திரை உலகில் முன்னணி சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் மம்மூட்டி பற்றி இயக்குனர் ஆர் கே செல்வமணி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பெருமையாக பேசியுள்ளார். அதில், மக்களாட்சி படத்தில் மம்முட்டி நடித்துக் கொண்டிருந்தபோது ஷூட்டிங் சமயத்தில் அவருக்கு ஒருமுறை அருகில் இருந்தவர்கள் நாற்காலியை எடுத்துப் போட சென்றனர்.

அதனை கவனித்து உடனே தடுத்த மம்முட்டி, எப்பா என்னை நீங்க கெடுத்துருவீங்க போல. இப்படி எல்லாம் எங்கள் ஊரில் செய்தால் திட்டுவார்கள் என்று சொல்லி தனக்கான நாற்காலியை தானே எடுத்துப் போட்டுக் கொண்டார். அது மட்டுமல்லாமல் அவர் வீட்டில் இருந்து வரும் போது எப்பவுமே சாப்பாடு கொண்டு வந்து விடுவார். என்னுடைய ஒரு படத்தில் நடிக்க அவருக்கு 25 லட்சம் நான் சம்பளம் கொடுத்த நிலையில் அந்த சமயத்தில் மற்றொரு மலையாள படத்தில் நடிக்க அவர் வெறும் 2 லட்சம் மட்டுமே சம்பளம் வாங்கினார். இது குறித்து அவர் கிட்ட கேட்டபோது அந்தப் படத்தோட கதை அவ்வளவுதான், அதுக்கு அந்த சம்பளம் தான் கரெக்ட் என்று கூறி 25 நாட்கள் அந்த படத்தில் நடித்து கொடுத்தார். அந்த அளவிற்கு சினிமாவில் ஒரு திறமையான நடிகர் என்று ஆர் கே செல்வமணி புகழாரம் பேசியுள்ளார்.
