போட்டிக்காக அஜித் படத்தோடு மோத வேண்டுமென்று சொன்ன விஜய் & SAC… பிரபல இயக்குனர் பகிர்ந்த தகவல்!

By vinoth on ஆவணி 7, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன.

தற்போது மாஸ் நடிகராக இருக்கும் விஜய், 90 களில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். இடையிடையே ஹிட் கொடுத்திருந்தாலும் அவருக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் கில்லி படத்துக்கு முன்பே உருவானது. அதனால் அதற்கு முந்தைய படங்களில் எல்லாம் தன்னுடைய படத்தில் துறைசார்ந்த பிரபலங்கள் இருக்க வேண்டும், அது படத்தின் பிஸ்னஸுக்கு உதவும் என விரும்புவார்.

   

விஜய்யை திருமலை என்ற படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியவர் இயக்குனர் ரமணா. அந்த படத்தின் விஜய்க்கு அவர் கொடுத்த கெட்டப்தான் விஜய் இப்போது வரை தன் படங்களில் பயன்படுத்தி வருகிறார். இதனால் அந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் சில ஆண்டுகள் கழித்து ‘ஆதி’ என்ற படத்தில் இணைந்தனர்.

   

தெலுங்கு படமொன்றின் ரீமேக்கான இந்த படம் ரிலீஸான போது படுதோல்வி அடைந்து கடுமையான கேலிகளையும் சந்தித்தது. அதுபற்றி சமீபத்தில் பேசியுள்ள இயக்குனர் ரமணா “இந்த படம் ஆரம்பித்த போது எல்லாமே நல்லபடியாக நடந்தது. 11 மணிக்கு பூஜை போட்டோம். அரை மணிநேரத்தில் அனைத்து உரிமைகளும் விற்றுத் தீர்ந்தன. படத்தை ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் செய்யலாம் என வேலை செய்துகொண்டிருந்தோம்.

 

அப்போது அஜித் சார் நடித்த பரமசிவன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிப்பு வந்தது. உடனே எஸ் ஏ சி சாரும், விஜய்யும் நம் படமும் பொங்கலுக்கு வரவேண்டும். அப்போதுதான் ஒரு போட்டி உருவாகும். படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என்று அழுத்தம் கொடுத்தார்கள். நான் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு 3 மாதம் டைம் வைத்திருந்தேன். ஆனால் அவர்களின் இந்த முடிவால் என்னால் சரியாக போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள், கிராபிக்ஸ் பணிகள் செய்ய முடியவில்லை.” எனப் பேசியுள்ளார்.