தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் சென்னை திருவிக நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பல்லவி. தேர்தல் பரப்புரையின்போது நிறைமாத கர்ப்பிணியாக களமிறங்கி கவனம் பெற்ற அவர், தேர்தல் முடிந்த சில வாரங்களில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு ‘தளபதி வெற்றி கொண்டான்’ எனப் பெயரிட்டுள்ள அவர், பச்சிளம் குழந்தையுடன் தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை ஐஐடியில் அண்மையில் நடைபெற்ற பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்விலும் பல்லவி தனது குழந்தையுடன் கலந்துகொண்டார். இதனைச் சுட்டிக்காட்டிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், குழந்தையைத் தொடர்ந்து பொது நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்வது அரசியல் பகட்டு மற்றும் கவன ஈர்ப்புச் செயலாகத் தோன்றுவதாகவும், இதுகுறித்து தவெக தலைவர் விஜய் உரிய ஆலோசனை வழங்குவார் என நம்புவதாகவும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
கார்தி சிதம்பரத்தின் இந்த கருத்துக்கு இயக்குநர் மோகன் ஜி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், நாத்து நடும்போதும், கட்டிடப் பணியின்போதும், ஏன் ஐடி துறைகளில் கூட தாய்மார்கள் குழந்தைகளைத் தூக்கிச் சென்று பராமரிப்பதைப் பார்த்ததில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இது விளம்பரமாக இருந்தால் கூட அலுவலகம் செல்லும் பல தாய்மார்களுக்குக் குழந்தையைப் பராமரிக்க ஊக்கமாக அமையும் என்றும், இது புனிதமான தாய்மை என்றும் மோகன் ஜி ஆதரவு தெரிவித்துள்ளார்.
பொதுவாழ்வில் இருக்கும் பெண் அரசியல்வாதிகள் மற்றும் தாய்மார்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், குழந்தைகளுடன் பணிபுரியும் பெண்களின் உரிமைகள் குறித்தும் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. ஒருபுறம் விளம்பரத்துக்காகக் குழந்தை பயன்படுத்தப்படுவதாக எதிர்ப்புகள் எழுந்தாலும், மறுபுறம் பணிக்குச் செல்லும் தாய்மார்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாகப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
