கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்தான் மிஸ்கின். முதல் படத்திலேயே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றார். இந்தத் திரைப்படத்திற்காக மிஷ்கினுக்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம் பேர் வழங்கப்பட்டது. தன்னுடைய முதல் படத்தில் ஏற்படுத்திய தாக்கம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிஸ்கினுக்கு பெரும் அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது. அதனால் அவருடைய அடுத்த படமான அஞ்சாதே படத்திலும் தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்த அவர் தவறவில்லை.

அடுத்தடுத்து இவருடைய இயக்கத்தில் வெளியான நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன் மற்றும் சைக்கோ ஆகிய திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இவருடைய இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தான் ட்ரெயின். கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மார்ச் மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மிஸ்கின் இயக்குனராக மட்டும் இல்லாமல் நடிகராகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். மிஸ்கின் ஒரு படத்தில் இருக்கிறார் என்றால் அந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு தனி எதிர்பார்ப்பு ஏற்படும்.

இறுதியாக இவர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படியான நிலையில் மிஸ்கின் சமீபத்தில் அளித்த பேட்டியில் கமல்ஹாசன் பற்றி பேசியுள்ளார். அதில், நந்தலாலா திரைப்படத்தை பார்த்துவிட்டு படம் நல்லா இருக்கு என்று சொல்லிட்டு என்னை பார்க்க வேண்டும் என கமல்ஹாசன் கூறினார். உடனே அவரைப் பார்க்கச் சென்றதும் கொஞ்சம் வேலையா இருக்கேன் நாளைக்கு வாங்க என்று சொல்லிட்டாரு. அடுத்த நாள் சென்றதும் அவர் என்னுடன் படம் பண்ண வேண்டும் ஏதாவது கதை இருந்தா சொல்லுங்க என்று சொன்னாரு.

உடனே நான் அவரிடம் ஒரு மூன்று கதைகளை கூறினேன். அதில் மூன்றாவது கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொன்னாரு. பிறகு எல்லாம் பேசி முடிச்சுட்டு 40 நாட்கள் அதற்கான வேலைகள் எல்லாம் நடந்தது. அதன் பிறகு ஒரு விஷயம் நடந்தது. ஆனால் அதனை நான் வெளிப்படையாக சொல்ல விரும்பவில்லை. அந்த விஷயம் நடந்ததும் அங்கு இருந்து நான் உடனே வெளியே வந்துட்டேன். என்னுடைய மூன்றாவது படத்திற்கு அப்போது எனக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம். எனக்கு கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்துட்டு இந்த படம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு நான் அங்கிருந்து கிளம்பிட்டேன் என்று கமல்ஹாசனுடன் நடந்த கசப்பான அனுபவம் குறித்து மிஸ்கின் பகிர்ந்து உள்ளார்.
