நாம் காதலித்தால் சும்மா விடுவார்களா?… ஆனா இவர் டூயட் பாடினால் ரசிக்கிறார்கள் – கல்லூரி மாணவராக எம் ஜி ஆரை கலாய்த்த மகேந்திரன்!

By vinoth on மே 31, 2024

Spread the love

தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை வசனம் எழுதிய மகேந்திரன் முதல் முதலாக முள்ளும் மலரும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  தான் கதை வசனம் எழுதிய படங்களில் எல்லாம் சிறப்பான வசனங்களை எழுதிய அவர் தான் இயக்கும் படத்தில் வசனத்தை விட காட்சிகளுக்கே அதிக முக்கியத்துவம் இருக்க வேண்டும் என நினைத்தாராம். அதனால் தான் அவர் படங்களில் வசனங்கள் குறைவாக இருக்கும்.

முள்ளும் மலரும் அதே பெயரில் வெளியான ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அதே போல அவரின் உதிரிப்பூக்கள் படமும் புதுமைப் பித்தனின் சிற்றன்னை சிறுகதையை தழுவி உருவாக்கப்பட்டது. அவரின் சாசனம் எனும் திரைப்படமும் குறுநாவலில் இருந்து தழுவி உருவாக்கப்பட்டது. இன்று வரை தமிழ் சினிமாவின் கவித்துவமான படங்களில் இயக்குனர் மகேந்திரன் படங்களும் அடக்கம்.

   

இப்படிப்பட்ட மகேந்திரன் சினிமாவுக்கு வந்த கதையே சுவாரஸ்யமானது. அவர் கல்லூரி விழாவில் எம் ஜி ஆர் முன்பு பேசிய போது அவரது படங்களையே கலாய்த்துதான் பேசியுள்ளார். எம் ஜி ஆர் முன்னிலையில் அவர்  “நாம் நிஜ வாழ்க்கையில் யாரையாவது காதலித்தால், கல்லூரி முதல்வரோ அல்லது குடும்பத்தினரோ ஏற்றுக் கொள்வார்களா. நிச்சயம் மாட்டார்கள். ஆனால் மேடையில் இருக்கும் எம்ஜிஆர், தனது படங்களில் எல்லாம் காதலித்த பெண்ணுடன் ஊர் முழுக்க சுற்றுகிறார். ஆனால், நம்மை போல கல்லூரி முதல்வரோ, அல்லது அவரது பெற்றோர்களோ ஒரு கேள்வியை கூட கேட்பதில்லை. அவரின் படங்களை ரசிக்கிறார்கள்” என மகேந்திரன் பேச, அங்கிருந்தவர்கள் அனைவரும் கைத்தட்டி வரவேற்றனர்.

   

இந்த பேச்சை எம் ஜி ஆர் எப்படி எடுத்துக் கொள்வாரோ என விழா ஏற்பாட்டாளர்கள் பயந்துள்ளனர். ஆனால் எம் ஜி ஆரை அவரின் பேச்சை ரசித்துக் கேட்டுள்ளார். அத்துடன் அங்கிருந்து கிளம்பிய போது, ஒரு சிறிய காகிதம் ஒன்றில், ‘நல்ல பேச்சு, நல்ல கருத்து. நகைச்சுவையுடன் உணர்வுபூர்வமான விளக்கம். சிறந்த விமர்சகராக இருக்க தகுதி உள்ளவர். வாழ்க, அன்பர் எம்ஜிஆர்’ என எழுதி மகேந்திரன் கையில் கொடுத்திருந்தார்.

 

அதன் பின்னர் மகேந்திரன் துக்ளக் பத்திரிக்கையில் நிரூபராக இருந்த போது அவரை அழைத்து பொன்னியின் செல்வன் நாவலுக்கு திரைக்கதை எழுத சொல்லிக் கேட்டுள்ளார். அது அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை என்றாலும் மகேந்திரனுக்கு சினிமா நுழைவு வாயிலாக அமைந்தது அந்த சம்பவம்.