பாலு மகேந்திராவுக்கு மட்டும்தான் அந்த மரியாதை.. அதற்காக நான் பல நாட்கள் பட்டினிக் கிடந்திருக்கேன் – இயக்குனர் பாலா பகிர்ந்த தகவல்!

By vinoth on மார்கழி 16, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய கதைகளில் ரௌத்திரத்தை ஏற்றி பார்வையாளர்களை திகைத்துப் போக வைக்கும் படங்களை எடுத்தவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கிய சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்கள் அவற்றின் உருவாக்கத்தால் இன்றளவும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கின்றன.

அவர் படங்களில் நடித்த பின்னர்தான் விக்ரம், சூர்யா மற்றும் ஆர்யா ஆகியோர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தனர். அதனால் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பல இளம் ஹீரோக்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர் படங்களில் கதாநாயகர்கள் பெரிய அளவுக்கு உயர்ந்தாலும், கதாநாயகிகள் போன இடம் தெரியாமல் காணாமல் போனார்கள்.

   

பாலா தன்னுடைய சுயசரிதைப் புத்தகமான ‘இவன்தான் பாலா’வில் தன்னுடைய வாழ்க்கையை எந்த ஒளிவு மறைவுமின்றி பகிர்ந்துள்ளார். ஒரு போக்கிரியாக இருந்த தன்னை சினிமாதான் மனிதனாக்கியது என்று கூறியுள்ளார். அப்படி அவரை பண்படுத்தியதில் அவரின் குருநாதரான பாலு மகேந்திராவுக்கு முக்கியமானப் பங்குண்டு.

   

 

பாலு மகேந்திராவிடம் வீடு படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்த பாலா அதன் பின்னர் அவரிடம் பல படங்களில் பணியாற்றி சேது படம் மூலமாக இயக்குனர் ஆனார். குற்றப்பரம்பரை கதையை படமாக்குவது சம்மந்தமாக இயக்குனர் பாரதிராஜாவுக்கும் பாலாவுக்கும் இடையே காரசாரமான வாக்குவாதங்கள் நடந்தன. அப்போது  ஒரு பத்திரிக்கையாளர் பாலாவிடம் பாரதிராஜா உங்களுக்கு குருநாதர் போன்றவர். அவருக்காக நீங்கள் விட்டுக்கொடுக்கலாமே” எனக் கேட்டார்.

அதற்கு பாலா ஆவேசமாக “எனக்கு ஒரே குரு பாலு மகேந்திரா அவர்கள்தான். அவருக்கு மட்டுமே அந்த ஸ்தானத்தை நான் கொடுத்திருக்கிறேன். அந்த ஸ்தானத்தை வேறு யாருக்கும் கொடுக்கக் கூடாது என்பதற்காக நான் பல நாட்கள் பட்டினியாகக் கிடந்திருக்கேன்.” எனப் பதிலளித்தார். இதன் மூலம் வேறு யாரிடமும் நான் உதவி இயக்குனராகப் பணியாற்ற விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.