தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், வின்னர், கிரி, கலகலப்பு என ஏராளமான படங்கள் கமர்ஷியலாக பெருவெற்றி பெற்றுள்ளன. முறைமாமன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சுந்தர் சி காமெடி, கிளாமர், ஆக்ஷன் என கலந்து கட்டி மசாலா படமாக எடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.

சுந்தர் சி படத்துக்கு சென்றால் வாய்விட்டு சிரித்து ரசித்துவிட்டு வரலாம் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். அதற்கேற்றார் போல சுந்தர் சி படங்கள் சுமாராக் இருந்தாலும் காமெடி கட்டாயம் ஹிட்டாகிவிடும். அதே போல சொன்ன பட்ஜெட்டில் சொன்ன தேதிக்குள் படத்தை எடுத்துக் கொடுத்துவிடுவார் என்ற நல்ல பெயரும் சுந்தர் சி க்கு உண்டு. அதே போல ஷூட்டிங்கில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை மாற்று யோசனை செய்து சமாளித்துவிடுவார் என்றும் அவரைப் பற்றி சொல்லப்படுவதுண்டு.

அவரது படங்கள் எப்போதுமே மினிமம் கியாரண்டி என்பதற்கு சமீபத்தில் ரிலீஸாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் ‘மத கஜ ராஜா’ திரைப்படமே உதாரணம். இந்த படம் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து ரிலீஸாகி யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றிப் படமாகியுள்ளது. பொங்கலுக்கு ரிலீஸான பல படங்களில் அதிகம் வசூல் செய்த படமாக உள்ளது. இப்படியான நிலையில் சுந்தர் சி சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் உதவி இயக்குனராக இருந்தபோது நடந்த நிகழ்வுகளைப் பற்றி கலகலப்பாக பேசியுள்ளார். அதில், மணிவண்ணன் சார் கிட்ட உதவி இயக்குனராக பணியாற்றிய போது முதல் நாள் சூட்டிங் பொள்ளாச்சி ஆனைமலை ரோட்டில் நடைபெற்றது.

அப்போது சத்யராஜ் சார் பைக்கில் வருவாரு. அந்த ரோட்டில் கேமரா வச்சுட்டாங்க. கேமரா முன்பு சாணி இருந்தது. அதைப் பார்த்துட்டு மணிவண்ணன் சார் என்னை சாணி அல்ல சொன்னாரு. நான் இன்னொரு உதவி இயக்குனரிடம் சாணி அல்லு என்று கூறினேன். அதற்கு மணிவண்ணன் சார் என்ன சொல்ல முடியாத ஒரு கெட்ட வார்த்தையால் திட்டி சாணியை அள்ள வைத்தார். அப்போ சாணி அள்ளியது இப்போது வரை உதவுகிறது. முன்னுக்கு வர வேண்டும் என்றால் எந்த காரியத்தை செய்யவும் யோசிக்க கூடாது என்று சுந்தர் சி பேசியுள்ளார்.
