பாலாவுக்கு பாலு மகேந்திரா கொடுத்த பரிசு இப்போது என்னிடம் உள்ளது… அதை என்னிடம் இருந்து வாங்கப் போவது யார்?- அமீர்

By vinoth on ஆடி 12, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர் இயக்கிய வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக உள்ளன. அவர் இயக்கிய அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தன.

இடையில் பாலு மகேந்திரா இயக்கிய சில படங்கள் வணிக ரீதியாக சரியாக போகவில்லை. அதனால் அவர் பொருளாதார நெருக்கடியில் இருந்துள்ளார். அப்போது அவருடன் பணியாற்றிய கமலஹாசன் மற்றும் சில்க் ஸ்மிதா போன்றவர்கள் அவருக்கு பொருளாதார ரீதியாக உதவிகளை செய்துள்ளனர்.

   

90 களின் இறுதியில் பாலு மகேந்திரா கிட்டத்தட்ட திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பை இழந்தார். அதனால் தொலைக்காட்சியில் கதை நேரம் என்ற பெயரில் பிரபல எழுத்தாளர்களின் கதைகளை சினிமாவாக எடுத்துள்ளார். அதன் பின்னர் அவர் சில படங்களை இயக்கினாலும் அவை பெரியளவில் கவனம் பெறவில்லை.

   

இந்த சூழ்நிலையில்தான் அவரிடம் இருந்து பாலா, இயக்குனர் ராம், வெற்றி மாறன், சீனு ராமசாமி மற்றும் துரை செந்தில்குமார் போன்ற இயக்குனர்கள் வெளியாகி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக உள்ளனர். இந்நிலையில் பாலா சேது திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் பெரிய அதிர்வுகளை உண்டாக்கினார்.

 

அப்போது அவரை சந்தித்த பாலுமகேந்திரா தன்னுடைய குரு தனக்கு பரிசாக அளித்த வியூபைண்டரை அவருக்குக் கொடுத்துள்ளார். பாலாவிடம் இணை இயக்குனராக இருந்து வெளிவந்து பருத்திவீரன் என்ற கிளாசிக் படத்தைக் கொடுத்த அமீருக்கு அந்த வியூபைண்டரை அதை பாலா பரிசாகக் கொடுத்துவிட்டாராம்.

அமீரின் உதவி இயக்குனராக இருந்த சசிகுமார், சுப்ரமணியபுரம் என்ற படத்தின் மூலம் கவனம் பெற்ற போது அதை அவருக்குக் கொடுக்கவேண்டும் என அமீர்  விரும்பினாராம். ஆனால் இன்னும் சில படங்கள் பண்ணியதும் கொடுக்கலாம் என நினைத்து தன்னிடமே வைத்துக் கொண்டாராம். அதற்குள் சசிகுமார் நடிகராகி விட்டார்.

இதனால் இப்போது வரை அந்த வியுபைண்டர் தன்னிடமே உள்ளதாக கூறியுள்ள அமீர், அதை விரைவில் யாருக்காவது நான் கொடுக்கவேண்டும் என ஒரு மேடையில் பேசியுள்ளார்.