தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று மாமல்லபுரத்தில் அக்கட்சியின் மகளிர் அணியினருடன் இணைந்து பிரம்மாண்ட விழாவைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளார். இந்த விழாவில் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை அவர் அறிவிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இந்த மகளிர் தின விழாவைக் கடுமையாக விமர்சித்து இயக்குநர் அமீர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் அமீர் தனது பதிவில், “மனைவி மற்றும் மகளை வீட்டில் இருந்து விரட்டிவிட்டு மகளிர் தின விழா கொண்டாடுவது ஒரு கேவலமான அரசியல் நிகழ்ச்சி” என்று சாடியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் ஒரு புதிய ‘ஹிட்லர்’ உருவாகிக் கொண்டிருப்பதாகவும் அவர் விஜய்யைக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வரும் சூழலில், அமீரின் இந்த நேரடித் தாக்குதல் அரசியல் மற்றும் திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் மகள் ஆகியோர் அவரைப் பிரிந்து வெளிநாட்டில் வசித்து வருவதாகப் பல்வேறு செய்திகள் உலவி வருகின்றன. சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அதில் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, ஒரு பிரபல நடிகையுடனான தொடர்பு குறித்தும், அதனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவுகள் குறித்தும் சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாகச் செய்திகள் பரவி வருகின்றன.
இப்படியான குடும்பச் சிக்கல்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் விஜய் பொது மேடைகளில் பெண்களின் முன்னேற்றம் குறித்துப் பேசுவது முரணாக இருப்பதாக அமீர் போன்ற விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கல்பாத்தி குடும்பத் திருமண விழாவில் விஜய் மற்றும் நடிகை திரிஷா இருவரும் ஒரே காரில் வந்து பங்கேற்றது தவெக தொண்டர்களிடையேயே ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இப்போது அமீரின் இந்த ‘ஹிட்லர்’ ஒப்பீடு விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
