கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் மிகப்பெரிய வைரலாக இருந்த விஷயம் பருத்திவீரன் தயாரிப்பு குறித்த விவகாரத்தில் அமீர் – ஞானவேல் ராஜா பிரச்னை தான். இந்த விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்பது குறித்து இயக்குநர் அமீர் ஒரு நேர்காணலில் வெளிப்படையாக பல விஷயங்களை கூறியிருக்கிறார்.
அதில் அமீர் கூறியதாவது, பருத்திவீரன் படம் தயாரிப்பு குறித்து கோர்ட்டில் வழக்கு நடக்கிற விஷயத்தை அதுவரை நான் வெளியில் யாரிடமும் சொல்லவில்லை. சொல்லவும் விரும்பியது இல்லை. மாயவலை படம் குறித்த பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, கார்த்தி 25 விழாவில், நீங்கள் ஏன் கலந்துக்கொள்ளவில்லை என கேட்ட போது, அவர்களுக்கும் எனக்கும் பிரச்னை இருப்பதை சுட்டிக்காட்ட வேண்டிய கட்டாயத்தால், 17 ஆண்டுகளாக பருத்திவீரன் படம் தயாரிப்பு பிரச்னையில் வழக்கு நடப்பதை சொல்ல நேரிட்டது.
இதற்கு பதிலளித்த தயாரிப்பாளர், அமீர் சரியாக கணக்கு காட்டவில்லை. அதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் பேசிய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டாததால், கோர்ட் வழக்கு நடக்கிறது என்று கூறியிருந்தால், அதன்பிறகு இதைப்பற்றி யாருமே பேசியிருக்க மாட்டார்கள்.
ஆனால் அவர் தேவையின்றி என்னை பற்றி இழிவாகவும், அவதூறாகவும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. அதற்கு பதிலாக, என் மீது அன்பு கொண்ட கலைத்துறை நண்பர்கள் அவருக்கு பதில் சொன்னதால் பிரச்னை இன்னும் பெரியதாகி விட்டது. இல்லை என்றால் இந்த விவகாரம் வெளியே வந்திருக்காது.
ஆனால் பருத்திவீரன் படம் தயாரிப்பு விஷயத்தில் மக்கள் தரப்பில் இருந்து எனக்கு நீதி கிடைத்து விட்டது. மக்கள் என் தரப்பில் இருந்த உண்மையை ஏற்றுக்கொண்டார்கள். நான் சொன்ன விஷயங்களில் இருந்து அவர்கள் உண்மையை புரிந்துக்கொண்டு என் பக்கமாக நின்றார்கள். எனக்கு அதுவே போதும்.
நீதிமன்ற தீர்ப்பு வரும்போது வரட்டும். அதில் எப்படிப்பட்ட முடிவாக இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளவே போகிறேன். ஆனால் அதற்கு முன் மக்களும், கலையுலகம் சார்ந்த என் நண்பர்களும் எனக்கு பக்கபலமாக, ஆறுதலாக இருந்ததே பெரிய சந்தோஷத்தை எனக்கு தந்துவிட்டது.
நானும் சூர்யாவும் பலமுறை சந்தித்த நிலையிலும், ஒருமுறை கூட பருத்திவீரன் படம் தயாரிப்பு பிரச்னை குறித்து நானும் பேசியது இல்லை. அவரும் பேசியது இல்லை. சமீபத்தில் கலைஞர் 100 விழாவில் கலந்துக் கொண்ட போதும் என்னை பார்த்தவுடன் அருகில் வந்தார். நலம் விசாரித்தார். கட்டியணைத்தார். எங்களுக்குள் இருக்கிற அந்த நட்பில் எந்தவிதமான முரண்பாடும் இல்லை.
இன்னும் பருத்தி வீரன் விவகாரத்தில் நிறைய கதைகள் உள்ளது. ஆனால் அதை எல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இவர்களே ஏதேனும் பிரச்னையை கிளப்பி என்னை சொல்ல வைப்பார்கள். ஏனெனில் இந்த முறை நடந்ததே அதுதான். அவர்கள் பிரச்னையை பேசாவிட்டால், நான் வெளியே இதை பேசியே இருக்க மாட்டேன், என்றும் கூறியிருக்கிறார் இயக்குநர் அமீர்.