திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியில் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், கணவரே அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ள கோரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித்குமாரும், திண்டுக்கல்லைச் சேர்ந்த சுவேதாவும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற போதிலும், குடும்ப எதிர்ப்ப மீறி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்த நிலையில், சுவேதா சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். இதைக் கண்ட அஜித்குமார் கோபமடைந்ததுடன், நண்பர்களின் தவறான தகவல்களாலும் அவர் மீது கடுமையான சந்தேகம் கொள்ளத் தொடங்கியுள்ளார்.
இதனிடையே, தீபாவளியைக் கொண்டாடுவதற்காக மனைவியைப் பார்க்கச் சென்ற அஜித்குமார், சுவேதாவின் செல்போனைச் சோதித்தபோது அந்த சந்தேகம் மேலும் வலுத்துள்ளது. இதுகுறித்து அவர் மனைவியிடம் விளக்கம் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. நண்பர்கள் சொன்ன தகவல்களும், செல்போனில் பார்த்த காட்சிகளும் ஆத்திரத்தை அதிகரிக்க, எல்லை மீறிய கோபத்தில் கணவர் அஜித்குமார் வீட்டிலிருந்த அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
படுகொலை செய்தபின் அங்கிருந்து நேராகக் காவல் நிலையம் சென்று அஜித்குமார் சரணடைந்த நிலையில், போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்து கொண்ட ஒரு வருடத்திற்குள்ளாகவே, அடிப்படை ஆதாரமற்ற சந்தேகத்தால் ஒரு குடும்பமே சீரழிந்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
