மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதில், தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகவும் மோசமான ஒரு காதல் உறவில் இருந்ததாகவும், அதனால் உடல் அளவிலும் மனதளவிலும் கடுமையான உளைச்சலுக்கு ஆளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னை முழுமையாகக் கட்டுப்படுத்த நினைத்த அந்தக் காதலர், அடிக்கடி பிரிவதாகக் கூறுவதும் பின்னர் மன்னிப்பு கேட்பதுமாக மிகவும் முரண்பாடாக நடந்துகொண்டுள்ளார். மேலும், தனது பழைய கஷ்டங்களை வைத்து மிரட்டவும் செய்துள்ளார். இறுதியில் இரு வீட்டாருக்கும் இடையே நடந்த பேச்சின் போது அவரது உண்மை முகம் தெரிந்ததால், அந்த நச்சுத்தன்மை வாய்ந்த உறவில் இருந்து தான் நிரந்தரமாக விலகிவிட்டதாக அனுபமா அந்தப் பேட்டியில் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
இந்த விவகாரத்தில் அனுபமா தனது முன்னாள் காதலரின் பெயரை வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், அது நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரமாகத்தான் இருக்கும் என சமூக வலைத்தளங்களிலும் சினிமா வட்டாரங்களிலும் பரவலாகப் பேசப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து ‘பைசன்’ திரைப்படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியதாக முன்பு செய்திகள் வெளியாகின. இருவருக்கும் திருமணம் நடக்கவிருப்பதாகவும் வதந்திகள் பரவின. இதற்கிடையே, துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் விரக்தியாக இருப்பது போன்ற ஒரு வீடியோவை சமீபத்தில் பகிர்ந்தது, நெட்டிசன்களின் சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், இவர்கள் இருவரும் இணைந்து பங்கேற்ற ஒரு சினிமா நிகழ்ச்சியின் பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில் துருவ் விக்ரமும் அனுபமாவும் அருகருகே அமர்ந்திருக்க, துருவ்வின் காதில் அனுபமா ஏதோ கூறுகிறார். அதற்குப் பதிலளிக்கும் துருவ்வின் உதட்டசைவை வைத்துப் பார்க்கும்போது, “நீ உன் வேலையைப் பாரு” என்று அலட்சியமாகச் சொல்வது போல் அமைந்திருப்பதோடு, அதைச் சொல்லிவிட்டு அவர் சிரிப்பதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை தற்போது அதிகம் பகிர்ந்து வரும் இணையவாசிகள், துருவ்வின் இந்தச் செயலைப் பார்த்து அதிர்ச்சியடைந்து தங்களது விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
