இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராகத் தொடர்ந்த 100 கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் தன்னைத் தொடர்புபடுத்தி அவதூறாகப் பேசியதாகச் சம்பத்குமார் மீது தோனி இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். இந்தச் சூழலில், தன் மீதான இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனச் சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின் போது, சம்பத்குமார் பங்கேற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளின் குறுந்தகடுகளை (CD) எழுத்து வடிவ ஆவணங்களாக (Transcript) மாற்றித் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த மொழிபெயர்ப்பு மற்றும் ஆவணப்படுத்தும் பணிகளுக்கான செலவுத் தொகையான 10 லட்சம் ரூபாயைத் தோனியே செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மனுதாரர் என்ற அடிப்படையில் இந்தச் செலவை ஏற்குமாறு தோனிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக நடைபெற்று வரும் இந்த சட்டப் போராட்டத்தில், சம்பத்குமாரின் மனுத் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது தோனிக்குச் சாதகமான ஒன்றாகப் பார்க்கப்பட்டாலும், நீதிமன்றச் செலவுக்காக அவர் 10 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தகட்டமாக, இந்த எழுத்து வடிவ ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, சம்பத்குமார் மீதான அவதூறு வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
